15 வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்திய தொப்பூர் சாலையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்!-டாக்டர் அன்புமணி ராமதாஸ்

சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி மாவட்டம் தொப்பூரில் 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக் கொண்ட கொடிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையான குணமடைந்து, இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொப்பூரில் இன்று மாலை இரு சக்கர ஊர்தி மீது சிறிய சரக்குந்து மோதியதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அனிவகுத்து நின்ற நிலையில், சரிவான சாலையில் வேகமாக வந்த சிமெண்ட் சரக்குந்து பின்புறமாக மோதியதில் பல வாகனங்கள் நசுங்கின. அந்த வாகனங்களில் இருந்தவர்களில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான விபத்துகள் அங்கு நடந்துள்ளன. பெருமளவிலானோர் உயிரிழந்துள்ளனர். தொப்பூர் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணமாகும். இந்த வடிவமைப்பை மாற்ற ஆணையிட வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனாலும், சாலையின் வடிவமைப்பை மாற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மறுத்து வருவது தான் விபத்துகளுக்கு காரணமாகும்.
(Photo Credit: The Hindu)தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக நான் பணியாற்றிய போது, தொப்பூர் பகுதி நெடுஞ்சாலையை விபத்து இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். அதனடிப்பபடையில் 2017-18 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் காவல்துறை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து எல் அண்டு ட்டி நிறுவனத்தின் பொறியாளர்கள் குழு தொப்பூர் சாலையை ஆய்வு செய்தனர். விபத்து நடக்காத வகையில் சாலையை மாற்றியமைக்க ரூ.140 கோடியில் திட்டம் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, பின்னர் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றியமைக்கும் போது இதை சரி செய்து கொள்ளலாம் என்று கூறி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இத்தகைய விபத்துகளை தவிர்த்து இருக்கலாம்.
தொப்பூர் பகுதியில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்க அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வடிவமைப்பை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். இதற்காக வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து அதன் பரிந்துரை அடிப்படையில் சாலை வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்றைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
No comments