சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
நீலகிரியானது சுற்றுலா மாவட்டம் என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவதற்கு இ-பதிவு நடைமுறையில் உள்ளது. தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த தொடர் விடுமுறையால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிக்கு வந்து உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டு வரை சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டியில் வந்து தங்குவது வழக்கம்.
தற்போது கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் உள்ளதால் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா தலங்களை பயணிகள் கண்டு களித்து வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் மீண்டும் களை கட்டியுள்ளது. புத்தாண்டு கொண்டாடவும், டிசம்பர் மாத பனிப்பொழிவை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
இதனால் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி பர்லியாறு, குன்னூர், கோத்தகிரி மற்றும் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு செல்வதை காண முடிகிறது.
இதேபோன்று கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஏராளமான வாகனங்கள் ஊட்டிக்கு செல்கிறது. இதனால் ஊட்டியில் உள்ள ஹில்பங்க், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா, காந்தல் உள்பட அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் வாகனங்கள் ஆங்காங்கே சில நிமிடங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. மேலும் பொதுமக்கள், டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் குதிரை சவாரி மற்றும் புகைப்படம் எடுக்கும் தொழிலும் களைகட்டி உள்ளது.
No comments