Header Ads

ஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்

 

✍️—மகிழ்மதி

ஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு


ஜப்பானையும் நான்கு தென்கிழக்காசிய நாடுகளையும் சேர்ந்த  கிட்டத்தட்ட 300 இளையர்கள் 51 நாள் கடல் பயணத்தில் கலந்துகொண்டனர். கடந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நீடித்த இப்பயணத்தில் கலந்துகொண்ட 28 சிங்கப்பூரர்களில் சன்ஜே ராதாகிருஷ்ணாவும் ஒருவர்.


ஜப்பான், தென்கிழக்காசியாவைச் சேர்ந்த இளையர்களுக்கான இந்தத் திட்டத்திற்கு 46வது முறையாக இளையர் குழு ஒன்றை சிங்கப்பூர் அனுப்பிவைத்தது.


ஜப்பானின் யோக்கோஹாமா நகரில் ஒன்பது நாட்கள் தங்கிய பிறகு பங்கேற்பாளர்கள் அங்கிருந்து ‘நிப்பான் மாரு’ என்ற கப்பலில் ஏறி வியட்னாம், சிங்கப்பூர், மியன்மார், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தோக்கியோ திரும்பினர். 


ஒவ்வொரு நாட்டிலும் கல்வி நிலையங்கள், அரசாங்க அமைப்புகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டதுடன் அங்குள்ள ஒரு குடும்பத்துடன் வசித்து அந்தந்த நாடுகளின் சிறப்பம்சங்களைப் பற்றி தாங்கள் தெரிந்துகொண்டதாக சன்ஜே கூறினார். 


அத்துடன், பங்கேற்பாளர்கள் சென்ற கப்பல்களில் கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் நடந்தேறியதாக திரு சன்ஜே கூறினார்.


இந்தத் திட்டத்தைப் பற்றி தேசிய இளையர் மன்றத்தின் வழி தெரிந்துகொண்ட திரு சன்ஜே, பல தேர்வுச் சுற்றுகளுக்குப் பிறகு தாம் இதில் சேர்ந்ததாகத் தெரிவித்தார்.  


“இதே பயணத்திற்கு நான் முன்பு விண்ணப்பித்திருந்தேன், ஆனால் அப்போது நான் வெளிநாட்டில் இருந்ததால் ஓர் ஆண்டுக்குப் பிறகுதான் இதில் சேர்ந்தேன்,” என்று இவர் கூறினார்.


புதிய நட்பைத் தந்த வாய்ப்பு


சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பதோடு மற்ற நாடுகளைச் சேர்ந்த இளையர்களுடன் நட்பை ஏற்படுத்த விரும்பியதால் இந்தத் திட்டத்தில் திரு சன்ஜே சேர்ந்தார். 


“விளையாட்டுகளில் ஈடுபடும் நான், சிங்கப்பூரர்களின் பண்புநலன்களைப் பிரதிநிதிக்கும் தூதுவராக செயல்பட விரும்பினேன்,” என்றார் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் திரு சன்ஜே, 31.


பங்கேற்பாளர்கள் தங்களுக்குப் பிடித்த விஷயங்களின் அடிப்ப டையில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சுகாதாரம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான குழுவில் சேர்க்கப்பட்ட திரு சன்ஜே, இந்தப் பயணத்தின்போது அவற்றின் தொடர்பிலான இடங்களுக்கு  தாங்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறினார்.


வியட்னாமில் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறிய இவர், அங்குள்ளோர் கனிவுடன் பழகியதாக கூறினார். குறிப்பாக,  அங்குள்ள ஒரு குடும்பத்துடன் சேர்ந்து தங்கிய அனுபவம் மறக்க முடியாத ஒன்று என்றார் இவர்.


“அங்கு தங்கியது மூன்று நான்கு நாட்கள் என்றாலும் அந்தக் குடும்பம் என்னை அரவணைத்தது. அந்தக் குடும்ப உறுப்பினர்களில் சிலர் என்னைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினர்,” என்று திரு சன்ஜே கூறினார்.


பங்கேற்பாளர்கள் வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது அவர்களுக்கு இங்குள்ள பல இடங்களைச் சுற்றிக்காட்டியதாக திரு சன்ஜே தெரிவித்தார். 


ஜுவல் சாங்கி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் மேற்குக் கல்லூரி, கடல்துறை அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பார்த்ததோடு தீபாவளி நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்றனர். 


பிறகு சிங்கப்பூரிலிருந்து மியன்மாருக்கு கப்பல் புறப்பட்டது. அங்குள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்திற்குச் சென்றபோது வருகையாளர்களுக்கான கலைநிகழ்ச்சிகளும் சுற்றுப்பயணமும் இடம்பெற்றன. 


மியன்மாரில் ‘பகோடா ஷ்வேடகன்’ உள்ளிட்ட ஆலயங்கள், அரும்பொருளகங்கள், கடைத்தொகுதிகள் எனப் பல இடங்களுக்குத் தாங்கள் சென்றதாக திரு சன்ஜே கூறினார். 


மியன்மார் பயணத்தை முடித்து அடுத்ததாக அவர்கள் மலேசியாவுக்குச் சென்றனர். அங்கு கிள்ளான் துறைமுகம், புத்ராஜெயா ஆகிய இடங்களுக்கு அவர்கள் சென்றனர். அங்கிருந்து இறுதிப் பயணமாக அவர்கள் தோக்கியோவுக்குச் சென்றனர்.


நிலத்தைவிட கடலில் அதிக நேரம்


நிலத்தைவிட கடலிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டதாகக் கூறிய திரு சன்ஜே, கப்பலில் இருந்த அனுபவமே தமக்கு ஆக இதமான தருணங்களாக அமைந்ததாகக் கூறினார்.


பயணத்தின் தொடக்கத்திற்கு முன்னதாகவே பங்கேற்பாளர்கள் தத்தம் நாடுகளைப் பற்றிய படைப்புகளைத் தயாரிக்க வேண்டியிருந்தது. 


‘மைன்ட்வுல்னஸ்’ எனப்படும் அறிவுப் பயிற்சியை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்ததுடன் கப்பல் பயணத்தின்போது தீபாவளிக் கொண்டாட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். 


“பயணத்தில் இருந்த மலேசிய இந்தியர்களுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். கப்பல் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது நான் முறுக்கு, ஜிலேபி, பால்கோவா, அப்பளம் போன்ற பலகாரங்களை வாங்கினேன். அத்துடன், தீபாவளி பற்றிய காணொளி ஒன்றை அவர்களிடம் நாங்கள் காட்டினோம்,” எனத் திரு சன்ஜே தெரிவித்தார்.


ஒட்டுமொத்தப் பயணத்தை நடத்திய ஜப்பானிய ஏற்பாட்டாளர்கள், எதையும் தாமதமின்றி நேரத்துடன் செய்யவேண்டும் என்ற மனப்போக்கு உடையவர்கள் என்று திரு சன்ஜே தெரிவித்தார். 


ஜப்பானியர்களின் விருந்தோம்பல் பண்பு பலரும் அறிந்ததே என்றாலும் அவர்கள் நேரத்தைத் திட்டமிட்டு செலவிடக்கூடியவர்கள் என்பதால் அனைவரும் தாமதமின்றி செயல்படவேண்டும் என எதிர்பார்ப்பு நிலவியதாக திரு சன்ஜே  கூறினார். 


வெவ்வேறு நாட்டினருடன் பழகும்போது அவர்களுக்குரிய பொதுவான மனிதப் பண்புகளைத் தாம் ரசித்ததாக இவர் கூறினார். 


இந்த அரிய அனுபவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி என்று இவர் சொன்னார்.

No comments

Powered by Blogger.