Header Ads

சிகரெட் பண்டல்களை ஏற்றி வந்த லாரியை கடத்திய மர்ம நபர்கள்...

 ராஜாமதிராஜ்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் கூட்ரோடு பகுதியில்  ஐடிசி நிறுவனத்தின் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பிஸ்கட் பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்னை பெரம்பூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை காரில் வந்த ஆறு மர்ம நபர்கள் மடக்கினர். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை கீழே இறங்க வைத்து தாக்கி  காரில் ஏற்றி கண்களை கட்டினர். 6 நபர்களில் ஒருவர் லாரியை எடுத்துக்கொள்ள லாரியும் காரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து சென்றது. காரை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தி லாரி ஓட்டுனர் குமாரை  கீழே தள்ளி விட்டு காரும் லாரியும் பெங்களூர் மார்கமாக சிட்டாக பறந்தது.

சாலையில் மயங்கி கிடந்த லாரி ஓட்டுனர் குமார் பின்னர் எழுந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை பகுதியில் ஐடிசி பொருட்களை டெலிவரி செய்யும் யுசிஜி டிரான்ஸ்போர்ட்  மேலாளர் முளிதரனிடம்  நடந்தவற்றைக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து முரளிதரன்  ஐடிசி நிறுவனத்தின் காண்ட்ராக்டர் அவர்களுக்குத் தகவல் அளித்துவிட்டு  ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர்   குமாரிடம் விசாரித்தனர்.  குமார் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை பகுதியில் ஐடிசி குடோன் உள்ளது. அங்கிருந்து பல இடங்களுக்கு லாரிகள் மூலம் சிகரெட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களை சப்ளை செய்வார்கள் . நான் 1.52 கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு உளுந்தையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டம்  காட்டு கூட்டு ரோடு வழியாக மண்ணூர் சென்று கொண்டிருந்த  என்னை திடீரென காரில் வந்தவர்கள் தடுத்து நிறுத்தி என்னை தாக்கி கண்களில் கருப்பு துணி கட்டி காரில் கடத்தினர்.

காஞ்சிபுரம் அருகே என்னை கீழே தள்ளி விட்டு மறைந்து விட்டனர்.  நான் மயக்கமான நிலையில் இருந்தேன் . விழித்த பின்னர் காவல்துறைக்கும் என்னுடைய ட்ரான்ஸ்போர்ட் மேலாளரிடமும் நடந்தவற்றை கூறினேன் என்று குமார் விசாரணையில் தெரிவித்தார் . அவர் பல விஷயங்களை முன்னுக்குப்பின் முரண்பாடாக தெரிவித்த காரணத்தினால் காவல்துறையினர் குமாரிடம் மேலும் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல கோடி ரூபாய் பொருட்களுடன் லாரி கடத்துவது  மீண்டும்  தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.