சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா....
✍️ | ராஜாமதிராஜ்.
நாகை மாவட்டம் சீர்காழியில் 6-ஆம் ஆண்டு நெல் திருவிழா இன்று ஒரு நாள் நடைபெற்றது.நாம் சாப்பிடும் உணவு நஞ்சாக மாறி நாளுக்கு நாள் பிறந்த குழந்தையிலிருந்து, பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனையை நாடி செல்லும் சூழல் உள்ள நிலையில், இதனை போக்கும் விதமாக நாம் உண்ணும் உணவு நஞ்சற்ற உணவாக இயற்கை உரங்களால் உருவாக்கி இயற்கை உணவுகளை உண்ண வேண்டுமென நம்மை விட்டு மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து மறைந்தார்.அவரின் வழிகாட்டுதலின் படி நெல் ஜெயராமன் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி வந்தார்.
விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்து கூறி 2 கிலோ இயற்கை விவசாய நெல்லை வழங்கி வந்தார். இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிலையில் நெல் ஜெயராமன் கடந்த 6.12.2018-ந்தேதி புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்தநிலையில் நாகை மாவட்டம் சீர்காழியில் 6-வது நெல் திருவிழா இன்று ஒரு நாள் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக குறைந்த அளவே சமூக இடைவெளியுடன் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக பாரம்பரிய விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து இடு பொருட்களும், பாரம்பரிய நெல் விதைகள், அரிசி வகைகள் விற்பனை செய்யும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. நெல் திருவிழாவிற்கு வருகை புரிந்த தருமை ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து விழாவின் நிறைவில் இயற்கை விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல்மணிகளை இலவசமாக வழங்கினார்.
ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக அதிகளவு பொதுமக்கள் பங்கேற்கும் இந்த நெல் திருவிழா தற்பொழுது கொரோனா தொற்றின் காரணமாக குறைந்த அளவு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments