முதல்வர் காருக்குள் கடிதம் வீசிய பழ வியாபாரியை நேரில் அழைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனி்சாமி.....
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள இடையர்எம்பேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் செல்வராஜ். இவர் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் பழக்கடை நடத்தி வருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று நேற்று முன்தினம் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திருவாரூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை மதியம் தஞ்சாவூர் செல்லும் வழியில் நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.முக.சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது அண்ணா சிலை அருகே பழக்கடை வைத்திருந்த செல்வராஜ் என்பவர் முதல்வரின் கார் அருகில் சென்று தனது கையிலிருந்த கடிதத்தை முதல்வரிடம் கொடுக்க முயற்சி செய்தார். இயலவில்லை.
ஆனாலும் தனது கடிதம் முதல்வரிடம் சேர வேண்டும் என்பதற்காக முதல்வர் காருக்குள் கடிதத்தை வீசினார் செல்வராஜ். இதனைப்பார்த்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி செல்வராஜூவிடம் காருக்குள் என்ன வீசுகிறாய் எனக் கேட்டு செல்வராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கார் புறப்படவே கடிதத்தை முதல்வர் படித்தார். உடனடியாக அந்த நபரை நீடாமங்கலத்தில் இருந்து தஞ்சைக்கு அழைத்துவர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பழவியாபாரி செல்வராஜை நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர். தஞ்சையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீடாமங்கலம் பழவியாபாரி செல்வராஜை சந்தித்தார். செல்வராஜை கைகூப்பி வணங்கி பரிவோடு வரவேற்றார் முதல்வர். கடிதம் கையில் தான் கொடுக்க வேண்டும் வீசக்கூடாதுப்பா என்றார் முதல்வர்.
சரிங்க அய்யா என்ற செல்வராஜை பரிவுடன் தனது அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதல்வர் பழனிசாமி. இவரை பத்திரமாக வீட்டில் கொண்டு போய்விடுங்கள் என முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரிடமிருந்து விடைபெற்ற செல்வராஜூவிடம் அதிகாரிகள் பூங்கொத்தை முதல்வர் சார்பில் வழங்கினார்கள். ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா எனக் கேட்ட போது எனக்கென்று எந்த கோரிக்கையும் இல்லை என்றார். பின்னர் செல்வராஜ் அனுப்பி வைக்கப்பட்டார். அந்த கடிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நீடாமங்கலம் பழவியாபாரி செல்வராஜூடம் கேட்ட போது..
முதல்வர் அருகில் செல்ல இயலாத நிலையில் தான் கடிதத்தை காருக்குள் வீசினேன். அந்த கடிதத்தில் 5 தெய்வங்களின் மந்திரங்களை நான் குறிப்பிட்டிருந்தேன். ஓம் நமசிவாய, ஓம் கன்னிமூலகணபதி பகவானே சரணம், ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் சமயபுரத்தாளே துணை, ஓம் சாமியே சரணம் அய்யப்பா. திருச்செந்தூரில் ஆட்சிபுரியும் தமிழ்கடவுளான முருகன் அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. அவருக்கு பழனிசாமி என்ற பெயரும் உண்டு. அவர் பெயரை தங்களுக்கு வைத்ததால் தான் தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்து முதலமைச்சர் ஆனீர்கள். மீண்டும் 5 வருடம் தமிழக ஆட்சி பீடத்தில் அமர்வீர்கள். இது சத்தியம். இப்படிக்கு ஆர்.செல்வராஜ்.என எழுதியிருந்தேன்.
நான் சித்தர் வழிபாட்டிலும் ஈடுபாடு உள்ளவன். கொரடாச்சேரி செல்லூர் அருகில் திருகொள்ளம்பூர் இடைக்காட்டார் சித்தரை வழிபடுவேன். எனக்கு நீடாமங்கலம் முச்சந்தி அம்மன் அருள் பெற்றுதான் நான் முதலவருக்கு கடிதம் கொடுத்தேன். வேறு எனக்கென்று உள்நோக்கமோ, கோரிக்கையோ கிடையாது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என்பது இறைவனின் அருளாசி என்றார் செல்வராஜ்.
முதல்வர் காருக்குள் கடிதம் வீசப்பட்டு செல்வராஜை முதல்வர் காவல்துறையினரை விட்டு அழைத்து வரச்சொன்ன சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் செல்வராஜூவிடம் முதல்வர் பரிவோடு நடந்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
No comments