நீடாமங்கலம் அருகே ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
✍ | ராஜாமதிராஜ் .
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் நேதாஜி காலனியை சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மகன் ராஜா. நேற்று மாலை 6 மணியளவில் ராஜா தனது நண்பர் சதீஷ் என்பவருடன் நீடாமங்கலம் அருகே உள்ள நகர் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே ராஜாவும் அவரது நண்பரும் சென்று கொண்டிருந்தபோது இவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென ராஜா சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தனர். இதனால் நிலை தடுமாறிய ராஜாவும் அவரது நண்பர் சதீசும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். உடனே சுதாரித்து எழுந்த இருவரும் அருகே சித்தமல்லி பகுதி நோக்கி ஓடி அங்கு உள்ள வயலில் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் அவர்களை விடாமல் விரட்டி சென்ற மர்ம மனிதர்கள் ராஜாவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் தலை உள்பட உடலின் பல பாகங்களில் வெட்டுக்காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார். ஆனாலும் ரத்த வெறி அடங்காத மர்ம மனிதர்கள், ராஜாவுடன் வந்த சதீசையும் அரிவாளால் வெட்டியதுடன் அவரை மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் அதன் காரணமாக ராஜா கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் ராஜா ஒரு வழக்கு தொடர்பாக நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்ற சதீஷின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நேராமல் தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீடாமங்கலம் அருகே வாலிபர் ஒருவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments