நடனம் மூலம் தமிழ் கற்றுக்கொடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை...
✍ | ராஜாமதிராஜ்.
கொரோன வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய மாணவர் சேர்க்கை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் புதிதாக அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் தமிழக அரசும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயில்வதற்காக கல்வி தொலைக்காட்சி மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் மூலம் வகுப்புகளை தொடங்கியுள்ளனர்.
வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்கு பாடங்கள் அனுப்பப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கவரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள மீனா என்ற ஆசிரியர் மாணவ மாணவிகளுக்கு தமிழ் எழுத்துக்களை பல்வேறு நடனங்கள் மூலம் நடனமாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் தற்பொழுது இவர் கற்பிக்கும் இந்தப் பாடங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதுகுறித்து ஆசிரியர் மீனாவிடம் கூறியது
கடந்த 15 ஆண்டுகளாக நான் கவரபட்டி தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்.
முதல் இரண்டு ஆண்டுகள் இரண்டாம் வகுப்புக்கு ஆசிரியாக இருந்தேன். அதன் பிறகு 11 ஆண்டுகள் மூன்றாம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றினேன். தற்சமயம் இரண்டு ஆண்டுகளாக நான்காம் வகுப்புக்கு ஆசிரியாகப் பணிபுரிந்து வருகிறேன். நான் கல்வியைத் தவிர மாணவர்களின் தனித்திறமைகளில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவேன்.
பாடங்களையே பாடலாக கதைகளாக சொல்லி அவர்களை ஆர்வமூட்டுவேன். பாடலாகப் பாடும் போது அது மிகவும் எளிமையாக மாணவர்களின் மனதில் பதியும். அதோடு உற்சாகமாகவும் இருப்பார்கள். கூடுதலாக நடனமும் ஆடினால் எல்லையில்லா மகிழ்ச்சி தான். அப்படி சென்றுகொண்டிருந்த எங்களுடைய கற்றல் கற்பித்தல் நிகழ்வு இந்த கொரோனா காலகட்டத்தால் சிதைந்து வருகிறது. இப்படி இருக்கும் போது கடந்த 17 ஆம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு வந்த அரசின் உத்தரவால் எங்கள் பள்ளியிலும் சேர்க்கை நடைபெற்றது.
சேர்க்கைப்பணியை அன்றைய தினம் நான்தான் மேற்கொண்டேன். 15 ஆண்டுகளாக இருப்பதால் ஊர் மக்களும் பெற்றோர்களும் என்னுடன் எதார்த்தமாகவும் பிரியமுடனும் பழகுவார்கள். அங்ஙனம் இருக்க அன்றைய தினம் சேர்க்கைக்கு வந்த அனைத்து பெற்றோர்களும் பள்ளிக்குள் நுழைந்தவுடன் கேட்ட முதல் கேள்வி 'எப்போது தான் பள்ளி திறப்பார்கள், எனது குழந்தை முதன்முதலில் பள்ளியில் சேரும்போதுதான் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா, எனது குழந்தைக்கு அ ஆ இ ஈ நன்றாகத் தெரியும், 1, 2, நன்றாகத் தெரியும், abcd நன்றாகத் தெரியும் , ஆனால் எனது குழந்தையின் ஆர்வம் தடைபடும் வகையில் இப்படி பள்ளிக்கு வரமுடியாத சூழல் உள்ளதே' என்று புலம்பினார்கள். எனக்கு மிகவும் வேதனை அளித்தது அவர்களது புலம்பல்கள்.
நான் கடந்த ஓராண்டு காலமாக 'சின்னக்குயில்' என்ற வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கி நடத்திவருகிறேன். அதில் ஸ்மார்ட் போன் வசதியுள்ள 40 மாணவர்களை சேர்த்து விடுமுறை நாட்களிலும் இடைவிடாது தொடர்ந்து பாட செயல்பாடுகளையும் இதர திறமைகளை வளர்க்கும் செயல்பாடுகளையும் ஊக்குவித்து வருகிறேன். 17 ஆம் தேதியும் முதல் வகுப்பு சேர்க்கைக்கு வந்த பெற்றோரிடம் இது பற்றி சொல்லி அவர்களது எண்களையும் இணைத்து அதில் எவ்வாறு பதிவுகளை இடவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து அனுப்பினேன். வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் போது பெற்றோர் புலம்பியதுதான் எனது மனதில் ஓடியது. முதல் வகுப்பு குழந்தைகள் என்றாலே ஆடல் பாடலோடு இணைந்த மகிழ்ச்சியான கற்றல் தான். ஆகையால் வீட்டிற்கு வந்ததும் நமது தமிழ் மொழியில் கடினமாக உணரக்கூடிய மெய்யெழுத்துகளை மெட்டுப்போட்டு ஒரு நடனமாக ஆட முடிவெடுத்தேன்.
அப்போதும் இதை காணொளியாக பகிர்வதில் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. இருந்தபோதிலும் நாம் நல்ல செயலுக்காக செய்கிறோம், துணிந்து செய்வோம் என்று முடிவெடுத்து முழுமையாக செய்து முடித்து அதை மற்ற குழுக்களில் பகிர்ந்தேன். இன்று இந்தக் காணொளியால் எங்களது மாணவர்கள் வாட்ஸ்அப்பில் உற்சாகமாக நடனமாடிக்கொண்டே பாடுகிறார்கள் மெய்யெழுத்தை. இணையவழிக் கல்வி அவசியம் என்று உணரப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் இது குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
No comments