S$470,000க்கு ஏலம் போனது மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி
✍ | -மகிழ்மதி.
இந்தியாவின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி அணிந்த, தங்கமுலாம் பூசப்பட்ட அவரது கண்ணாடி £260,000 (S$470,000)க்கு ஏலம் போயிருக்கிறது.
அந்தக் கண்ணாடியை மகாத்மா காந்தி தமது உறவினருக்கு அளித்ததாக, குறிப்பு ஒன்றுடன் இந்தக் கண்ணாடியை, நான்கு வாரங்களுக்கு முன்பு ஒருவர், பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டோல் ஏலக் கடையின் கடிதப் பெட்டியில் விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்ட பிறகு இந்தத் தகவலை அந்த ஏல நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டது.
தன்னால் பயன்படுத்த முடியாத பொருட்களை, அவை தேவைப்படுவோருக்கு அல்லது தமக்கு உதவியவர்களுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மகாத்மா காந்தி.
1920 அல்லது 1930களில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்த தம் உறவினருக்கு அந்தக் கண்ணாடியை மகாத்மா காந்தி வழங்கியதாக அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கண்ணாடி சுமார் £15,000 விலைக்கு ஏலம் போகக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளை மிஞ்சி, பலமடங்கு அதிக விலைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
“இந்தக் கண்ணாடி சரியில்லை என்றால் எறிந்துவிடுங்கள்,” என்று கண்ணாடியை வழங்கிய நபர் குறிப்பிட்டதாக ஏல நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸ்டோவ் குறிப்பிட்டார்.
No comments