மயிலாடுதுறை அருகே லாரியை கடத்திய 2 பேர் கைது. லாரி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல்.
✍️ | ராஜாமதிராஜ்.
மயிலாடுதுறை அருகே உள்ள ராதாநல்லூர் அரசு மணல்குவாரியில் மணல் அள்ளுவதற்காக நிறுத்தியிருந்த லாரியை காணவில்லை என்று கடந்த 6-ஆம் தேதி லாரியின் ஓட்டுனர் குடவாசல் எட்டியலூரை சேர்ந்த சத்தியசீலன்(32) என்பவர் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மணல்மேடு போலீசார் தனிப்படை அமைத்து லாரியை தேடியபோது பல்வேறு ஊர்கள் வழியாக சென்றுள்ள காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது, லாரியை முன்னும் பின்னுமாக தொடர்ந்து கார் ஒன்றும் சென்றது.
இதையடுத்து லாரியை தேடிச்சென்ற போலீசார் நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். லாரியை கடத்தியதாக குடவாசல் சேங்காலிபுரம் அருண்பிரசாத்(40) மற்றும் தெற்குபொய்கைநல்லூர் மனோகரன்(27) ஆகியோரைக் கைது செய்தனர்.
அருண்பிரசாத்(40) சொந்தமாக வைத்திருந்த இந்த லாரிக்கு தவனைத்தொகை கட்டாததால் கும்பகோணம் சோழா நிதிநிறுவனத்தினர் லாரியை கைப்பற்றி ஏலம் விட்டபோது திட்டக்குடி சுப்ரமணியன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.
ஆனால், லாரியை பெயர் மாற்றம் செய்யவில்லை. மணல் அள்ளுவதற்காக மயிலாடுதுறைக்கு அனுப்பியபோதுதான் அருண்பிரசாத் தனக்கு ராசியான லாரியை விட்டுகொடுக்க மனமில்லாமல் லாரியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments