காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தனர்.
✍️ | ராஜாமதிராஜ்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரது மனைவி காந்திமதிக்கு சொந்தமான வானவெடி மற்றும் நாட்டு தயாரிக்கும் தொழிற்சாலை (வில்வம் ஃபயர் ஒர்க்ஸ்) உள்ளது.
இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலை 11 மணியளவில் திடீரென வெடி, வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் காந்திமதி (57), மாதவன் மனைவி ராசாத்தி (50), நம்பியார் மனைவி லதா (42), பெருமாள் மனைவி மலர்கொடி (65), உத்திராபதி மனைவி சித்ரா (45) உள்ளிட்ட 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரங்கநாதன் மனைவி ரத்னாம்பாள் (60), முத்து மனைவி தேன்மொழி (35) நம்பியார் மகள் அனிதா, ராஜேந்திரன் மனைவி ருக்குமணி (38) ஆகிய 4 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் இரு பெண்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஶ்ரீதரன், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
No comments