டெல்டா நெல் கொள்முதல் அளவை இரு மடங்காக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் முதலில் மதிப்பிடப்பட்டிருந்தாலும்கூட, உண்மையில் 4 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறுவை நடவு முன்கூட்டியே செய்யப்பட்டதால், அறுவடையும் மிகப்பெரிய பரப்பளவில் முன்கூட்டியே தொடங்கிவிட்டதுதான் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வந்து குவிவதற்கு காரணம்.
வழக்கமாக, நெல் கொள்முதல் நிலையங்களில் 1000 நெல் மூட்டைகளை மட்டும்தான் இருப்பு வைக்க முடியும். அதை கருத்தில்கொண்டு ஒரு நாளைக்கு 1000 நெல் மூட்டைகள் மட்டும்தான் கொள்முதல் செய்யப்படும்.
அந்த மூட்டைகள் அடுத்த நாள் காலையில் அங்கிருந்து கிடங்குக்கோ, அரிசி ஆலைக்கோ கொண்டு செல்லப்பட்டவுடன், அடுத்த நாளுக்கான நெல் கொள்முதல் தொடங்கும்.
ஆனால், இப்போது ஒரு நாளைக்கு 2000 மூட்டைகளுக்கும் கூடுதலான நெல் உழவர்கள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதால், அவற்றை முழுமையாக கொள்முதல் செய்ய முடியவில்லை. அதற்கான கட்டமைப்பும் இல்லை.
அதனால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை சாலைகளில் கொட்டி வைத்துள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் திடீர் திடீரென மழை பெய்வதால், நெல் நனைந்து வீணாகி விடுகிறது.
இது உழவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அளவை இரட்டிப்பாக்குவதன் மூலமாக மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். இது கடினமான செயல் அல்ல.
காவிரி பாசன மாவட்டங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சூழலுக்கு ஏற்ப கூடுதல் நெல் கொள்முதல் செய்தல், தற்காலிக கொள்முதல் நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதன் மூலம் நெல் கொள்முதலை இரட்டிப்பாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments