Header Ads

எஸ். பி. பாலசுப்பிரமணியம்; சகாப்தத்தின் முடிவு.!

மண்ணின் மீது  மனிதனுக்கு ஆசை...
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை....
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது,
இதை மனம்தான் உணர மறுக்கிறது....!

நீங்கள் பாடியது போல் மண் ஜெயித்து இருக்கலாம்,
ஆனால், எங்கள் மனம் மறுக்கிறது நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று!


ஆரம்ப கால வாழ்க்கை:
எஸ். பி. பாலசுப்பிரமணியம் சூன் 4, 1946 அன்று எஸ் பி  சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில், (தற்போது ஆந்திரப் பிரதேசம்) பிறந்தார். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
குடும்ப வாழ்க்கை:
பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.

திரைப்பயணம்:
1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்ரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் ௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.


திரையிசை வரலாறு:
இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார். இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்கள், தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.

எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.

எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடியுள்ளார். பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார். எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

சாதனைகள்:
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.


இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடக கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.

இவருக்கு ஆகஸ்ட் 5, 2020 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது.


 

No comments

Powered by Blogger.