Header Ads

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை மறைவு


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

 "கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி"

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. நாசரேத் துரை அவர்கள் உடல் நலக்குறைவால் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரமிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் பணியாற்றி - திராவிட இயக்கக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அவர் திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். தென்னிந்தியத் திருச்சபையில் திருநெல்வேலி, தூத்துக்குடி டயோசிசனில் சிறப்பு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு 11 முறை வெற்றி பெற்றவர். சிறுபான்மையின மக்களின் நலனுக்காக மட்டுமின்றி - தூத்துக்குடி வாழ் மக்கள் அனைவருக்குமே மனிதநேயமிக்க சேவகராக விளங்கிய நாசரேத் திரு. பி.துரைராஜ் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989 சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக அண்ணன் திரு. வைகோ அவர்களுக்கு வலது கரமாக விளங்கிய அவர் திராவிட இயக்கம் உருவாக்கிய கண்மணிகளில் ஒருவராகப் பொதுவாழ்வில் பிரகாசித்தவர். அவரது மறைவு - ம.தி.மு.க.,விற்கு மட்டுமின்றி - திராவிடப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் - அண்ணன் திரு. வைகோ அவர்களுக்கும் - ம.தி.மு.க. தொண்டர்களுக்கும் - திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ அவர்களுக்கு தோன்றாத் துணையாக இருந்து ம.தி.மு.க.வின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் தோழர் நாசரேத் துரை அவர்கள்.

அவர்தம் மறைவால் வாடும் குருதிக் குடும்பத்தினருக்கும், ம.தி.மு.க. தோழர்களுக்கும், குறிப்பாக அதன் பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ அவர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த திராவிட இயக்கச் செம்மல் தோழர் நாசரேத் துரை அவர்களுக்கு நம் வீரவணக்கம்!



No comments

Powered by Blogger.