Header Ads

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி பலருக்குத் தெரியாத சில உண்மைகள்!


✍️ | மகிழ்மதி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமாகி வந்த 74 வயதான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள், செப்டம்பர் 25, 2020 (இன்று) மதியம் மாரடைப்பால் காலமானார். தனது வாழ்நாளில் அதிகபட்ச பாடல்களை பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த ஆண் பாடகர் ஒருவர் நேற்று வரை இருந்தார். அது வேறு யாருமில்லை இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகர்களுக்காக குரல் கொடுத்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தான்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு திறமையான, தனது இனிமையான குரலால் பார்வையாளர்களை மயக்கும் ஆற்றலைப் பெற்ற பாடகர். 80, 90 மற்றும் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக இருந்தவர் எஸ்.பி.பி. கண்களை மூடி இவரது பாடலைக் கேட்டாலும் சரியாக கணிக்கும் வகையில், தனித்துவமான குரலைக் கொண்டவர். இத்தகைய இசை கலைஞர் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், அவரது பாடல்கள் என்றும் மறையாமல் நிச்சயம் அவரை நினைவுக்கூறும். இப்போது இந்திய சினிமாவின் பின்னணி பாடகரான எஸ்.பி.பி அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைக் காண்போம்.

குடும்பம் 
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கொணடம்பேட்டையில் பிறந்தவர். இவர் சாவித்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பல்லவி என்னும் மகளும், பின்னணி பாடகரும், திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் என்னும் மகனும் உள்ளனர்.

எஸ்.பி.பி-யின் ஆசை 
எஸ்.பி.பி-யின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இவரது தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் போது அதை கவனித்து, இசைக் கருவிகளையும் வாசிக்க கற்றுக் கொண்டார். இவரது ஆசை பாடகர் ஆக வேண்டும் என்பது. ஆனால் இவரது தந்தைக்கு இவர் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதற்காக ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்தார். இசையின் மீதுள்ள ஆர்வத்தால், கல்லூரியில் படிக்கும் போது பல இசைப்போட்டிகளில் கலந்து பரிசுகளைப் பெற்றுள்ளார்.

முதல் தேசிய விருது
1980 ஆம் ஆண்டு சங்கராபரணம் என்ற திரைப்படத்தின் பாடலை பாடியதனால் சர்வதேச முக்கியத்துவம் பெற்றார். சங்கராபரணம் ஒரு சிறந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்காக ஒரு பாடகராக முதல் தேசிய விருதை வென்றார்.

4 மொழிகளில் 6 தேசிய விருதுகள் 
எஸ்.பி.பி அவர்கள் நான்கு மொழிகளில் பாடல் பாடியதற்காக இந்தியாவில் நம்ப முடியாத ஆறு தேசிய விருதுகளை வென்றுள்ளார். அதில் இந்தியில் வெளிவந்த ஏக் தூஜே கே லியே என்னும் திரைப்படத்தில் உள்ள தேரே மேரே பீச் மெய் பாடலுக்காக எஸ்.பி.பி-க்கு தேசிய விருது கிடைத்தது. அதேப் போல் தமிழை எடுத்துக் கொண்டால், மின்சார கனவு திரைப்படத்தில் உள்ள தங்க தாமரை மலரே பாடலை பாடியதற்கு தேசிய விருது கிடைத்தது.

பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது 
பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 2001 ஆம் ஆண்டு இந்திய குடிமக்களின் கௌரவமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதையும், 2011 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் வென்றுள்ளார்.

50 ஆண்டு திரை வாழ்க்கை 
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள திரைத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான ஒரு பாடகராக வலம் வந்துள்ளார்.

பல முன்னனி நடிகர்களுக்கான குரல் 
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், மற்றும் அனில்கபூர் போன்ற திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற காந்தியின் தெலுங்கு டப்பிங் படமான பென் கிங்ஸ்லிக்காக டப்பிங் கொடுத்துள்ளார்.

12 மணிநேரத்தில் 21 பாடல்கள் 
ஒருமுறை கன்னட இசையமைப்பாளரான உபேந்திர குமாருக்கு 12 மணிநேர இடைவெளியில் 21 பாடல்களை பாடி பதிவு செய்துள்ளார். எஸ்.பி.பி-யின் தனது தொழில் வாழ்க்கையில், தொடர்ந்து ஒரு நாளைக்கு 16-17 பாடல்களைப் பல்வேறு மொழிகளில் பதிவு செய்வார். சில நாட்கள் தொடர்ந்து 17 மணிநேரம் பாடுவாராம்

இசையமைப்பாளர் 
பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

நடிகர் 
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 72 திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுப்போன்று வேறு எந்த பாடகரும் நடித்ததில்லை

இவ்வளவு பெருமைமிக்க பாடகரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.