மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், அடுத்த மாவட்டத்தின் முதல் நிறுத்தம் வரை செல்லும்.
✍️ | ராஜாமதிராஜ்.
ஒரு மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், அடுத்த மாவட்டத்தின் முதல் நிறுத்தம் வரை செல்லும் -அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
சென்னை மத்தியப் பணிமனையில் பேருந்து பராமரிப்புப் பணிகளை, செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊரடங்கு தளா்வுகளில் பேருந்துகளை இயக்க அனுமதியளித்ததையடுத்து, முதல் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 6,090 பேருந்துகள் இயக்கப்பட்டன. புறநகர் பேருந்துகள் 32 பயணிகளுடனும், நகரப் பேருந்துகளில் 24 பயணிகளுடனும் இயங்கி வருகின்றன. அனைவருக்கும் முகக் கவசம் கட்டாயம். பயணிகள் பின்புற வழியாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும். ஏறும் வழியில் வைக்கப்பட்ட கிருமிநாசினியைப் பயணிகள் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஓட்டுநா், நடத்துநா்களுக்குக் கிருமிநாசினி, முகக் கவசம் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறிகுறி உள்ள போக்குவரத்துப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதன் பின்னா் பொது முடக்கம் அமலில் இருப்பதால், பயணிகளின் வருகை இருக்காது. முதல் நாள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அதிக பேருந்துகள் இயக்கப்படும்.
தற்போது பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, முதல்வா் முடிவெடுத்து வெளியிடும் அறிவிப்புகளின்படி, போக்குவரத்துக் கழகங்கள் செயல்படும்.
ஊரடங்கு க்குக் முன் மாா்ச் மாதம் பெற்ற மாதாந்திர பயண அட்டையை, செப்.15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல், புதிய மாதாந்திர பயண அட்டை, புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படும். ஒரு இருக்கை இடைவெளி விட்டே பயணிகள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதிகளில், பேருந்து சேவை அதிகரிக்கப்படும். பயணிகளின் வசதிக்காக மாவட்ட எல்லையுடன் பேருந்து நிறுத்தப்படாமல், அடுத்த மாவட்டத்தின் முதல் நிறுத்தம் வரை பேருந்துகளை இயக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.
No comments