10 ஆம் வகுப்பில் தேறாத அரசு பள்ளி வாத்திக்கு ரெய்டு..! 21 ஆண்டுகள் தண்ட சம்பளம்...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே 10 ஆம் வகுப்பு பெயிலான ஒருவர் போலியான சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததை 21 ஆண்டுகள் கழித்து கல்வி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த காதிரி புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முடித்து தேர்வானதாக சான்றிதழ் கொடுத்ததால், கடந்த 1999 ஆம் ஆண்டு சொக்கன அள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து குரும்பட்டி பள்ளியில் பணியாற்றிய ராஜேந்திரன் தற்போது மிட்டல்லி புதூர் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் குண்டலபட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் , ஆசிரியர் ராஜேந்திரன் 10 ஆம் வகுப்பு கூட தேர்வாகாமல் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றி தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக முதல் அமைச்சரின் புகார் பிரிவுக்கு மனு அனுப்பி இருந்தார்.
இந்த புகார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தவிடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் 10 வகுப்பு தேர்ச்சி பெறாதவர் என்பது உறுதி செய்யப்பட்டது மேலும் அவர் அதன் பின்னர் எந்த ஒரு பள்ளியிலும் மேல் நிலை கல்வியோ ஆசிரியர் பயிற்சி கல்வியோ சேர்ந்து படிக்க வில்லை என்பதையும் கண்டறிந்தனர். அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மூலமாக போலியான 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழையும், ஞானவேல் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தேர்வில் ஆள்மாறட்டம் செய்து தேர்ச்சி சான்றிதழ் பெற்ற வழக்கு நிலுவையில் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 21 ஆண்டுகள் கழித்து விழித்துக் கொண்ட கல்வி அதிகாரிகள், போலி ஆவணங்கள் கொடுத்து அரசு நிர்வாகத்தை ஏமாற்றி வரும் ராஜேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ரஜேந்திரன் தனக்கு தெரிந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் சிபாரிசால் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வருவதாக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் போலி ஆசிரியரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
No comments