Header Ads

தி.நகரில் ரூ.2 கோடி நகை கொள்ளை விவகாரம்: தனிப்படை போலீஸாருடன் காவல் ஆணையர் ஆலோசனை


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

தியாகராய நகரில் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீஸாருடன் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை, தியாகராய நகர், மூசா தெருவில், ‘உத்தம் நகை மாளிகை’ என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருபவர்கள் ராஜேந்திர குமார், தருண், பரிஸ். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் பிற நகைக் கடைகளுக்குத் தேவையான நகை ஆர்டரை மொத்தமாக பெற்று அதை வேறு நிறுவனத்தின் மூலம் செய்து தொடர்புடைய நகைக் கடைக்கு கொடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது, அதே பகுதியில் உள்ள 2 தளம் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில், ஒரு பகுதியில் நகைகளை சேமித்து கடைபோல் வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி சம்பந்தப்பட்ட கடையின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் வீட்டுக்குள் இருந்த 4.125 கிலோ தங்க நகைகள், தங்கக் கட்டிகள், வைர நகைகள், 15 வெள்ளிக் கட்டிகள் உட்பட 2 கோடி ரூபாய்க்குமேல் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பினார்.

இதுகுறித்து மாம்பலம் காவல் நிலைய போலீஸார் 5 தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நபரைத் தேடி வருகின்றனர்.

முதல் கட்டமாக தனிப்படை போலீஸார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். முகம் முழுவதையும் மூடியிருந்ததாலும், கையுறை அணிந்திருந்ததாலும் அவரை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் கொள்ளை நடந்த இடம் மற்றும் அந்நேரத்தில் அந்த பகுதியில் எத்தனை பேர் போனில் பேசியுள்ளனர். அதன் மூலம் யாரேனும் தனது கூட்டாளிக்கு போனில் பேசியுள்ளாரா? என சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் செல்போன் டவர் பதிவுகளை அடிப்படையாக வைத்தும்போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தனிப்படை போலீஸாருடன் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.