Header Ads

திமுக பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.


திராவிட முன்னேற்றக் கழகம் பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது!"


"இந்த அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும்" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.


தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் உரிய பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், திராவிட முன்னேற்றக் கழகம் பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, எடப்பாடி  அ.தி.மு.க. அரசு தற்போதாவது இறங்கிவந்து “நீட்”  தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.


தமிழக அரசிடம் இந்த அதிகாரம் இருக்கிறது என்றால் - ஏன் மசோதா நிறைவேற்றினார்கள், ஏன் ஆளுநருக்கு அனுப்பி - அனைத்துத் தரப்பிலும் பதற்றத்தை ஏற்படுத்த, இத்தனை மாதம் கிடப்பில் போட்டார்கள் என்பது தனி விவாதத்திற்குரியது; விளக்கம் தரப்பட வேண்டியது.


இவ்வளவு காலம் மாணவர்களையும், பெற்றோரையும் ஏக்கத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியது ஏன் என்பது தனிக் கேள்வி என்றாலும், மேலும் தாமதிக்காமல் இந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


ஒருமனதாகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடிதம் எழுதி - போராட்டம் நடத்தி - மத்திய உள்துறை அமைச்சருக்குத் திராவிட முன்னேற்றக் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்லாம் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும், மத்திய பா.ஜ.க. அரசோ - தமிழக ஆளுநரோ தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு குறித்து இதுவரை கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை; மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநருக்கு உரியபடி அறிவுறுத்தவும் இல்லை!


இந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசும் - தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி - பா.ஜ.க.வுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப்  பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதில் - இப்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா தவறா - அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா  இல்லையா என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கி விட்டது.


இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி (“By order of Governor”) என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது  ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.


இவை ஒருபுறமிருக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து - மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும், அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீட்டிற்கு, எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க வேண்டிய மிக முக்கியக் கடமையை அ.தி.மு.க. அரசு கண்ணும் கருத்துமாக – மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.