Header Ads

அக்டோபர்_9 சே_குவேராவுக்கு வீரவணக்கம்!


 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

இன்று அக்டோபர் 09 - போராளி என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்த எர்னஸ்டோ சே குவேரா கொல்லப்பட்ட நாள்!

போராளி சே குவேராவுக்கு வீரவணக்கம்!

உலகம் முழுவதும் போராளிகள் தன் இனம்- மொழி- நாட்டுக்காக போராடுவார்கள். ஆனால் நாடு, இனம், மொழி கடந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சர்வாதிகாரத்தை எதிர்த்து, அடக்குமுறைகளை எதிர்த்து போராடியவர் சே குவேரா.

"எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்பு கேட்கிறதோ, அங்கெல்லாம் என் கால் தடங்களைப் பதிப்பேன்" 
என்று தன்னை உண்மையான போராளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தார்.

அர்ஜெண்டினாவில் பிறந்தார் (1928). தம் 25-ஆம் வயதில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் சுற்றினார். மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார். போராளிகளின் மருத்துவர் ஆனார்.

 தன்னுடைய வழிகாட்டியாக அமெரிக்கப் புரட்சியாளர் ஜோஸ் மார்த்தியை ஏற்றுக்கொண்டவர். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கியவர்.

 கியூபா ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்று, அமெரிக்கக் கைக்கூலி இராணுவ சர்வாதிகாரி பாடிஸ்டாவிடம் சிக்கித் தடுமாறியபோது, கியூபாவை சர்வாதிகாரியிடமிருந்தும், கியூபாவின் வளங்களைக் கொள்ளையடிக்கக் காத்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்தும், கியூபாவைக் காப்பாற்ற பிடல் காஸ்ட்ரோ ஆயுதப் போர் புரிந்த நிலையில், தன்னையும் அப்போரில் இணைத்துக்கொண்டார். 

 கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் கரந்தடிப் போராளிகளுக்கு மருத்துவம் செய்து, அவரும் போராளியாக மாறினார். சக போராளிகளால் "சே" (தோழர்) என்று அடையாளப்படுத்தப்பட்டார். 

பிடல் காஸ்ட்ரோவுடன் 1956 - இல் சிறையிடப்பட்டு, விடுதலை செய்யப் பட்டார். 

சேகுவேராவின் வருகை கொரில்லா போர் முறையில் மாற்றம்,  போராட்டத்தில் வெகுமக்கள் இணைப்பு என்ற மாற்றங்களைக் கொண்டு வந்தது.

 1958ல் பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ முன்னேறினர். சாண்டா கிளாராவை முற்றுகையிட்டு சே கைப்பற்றினார். இறுதியாக, ஹவானாவும் கைப்பற்றப்பட்டது.

1959-இல் பாடிஸ்டா என்ற அந்த கியூபா சர்வாதிகாரி தப்பி ஓடினான். விடுதலை பெற்ற கியூபா தேசத்தின் தலைமைப் பொறுப்பேற்ற பிடல் காஸ்ட்ரோ, முதல் நிலைப் பதவிப் பொறுப்பை  சே குவேராவுக்கு வழங்கிய போதிலும், சேகுவேரா ஓய்ந்து அமர்ந்து விடவில்லை. கண்டம் தாண்டி காங்கோவின் மக்கள் போராட்டத்தில் பங்கெடுக்கச் சென்றார். காங்கோவில் போராட்ட முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் திரும்பி வந்த சே குவேரா, வெனிசூலா, கௌதமாலா, பொலிவியா போன்ற தென் அமெரிக்க ( இலத்தீன் அமெரிக்க) நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளை கவிழ்த்து மக்களுடைய ஆட்சியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். போராடும் மக்களோடு இணைந்து நின்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. 

மக்கள் பார்வையில் சே குவேரா ஈடு இணையற்ற போராளி. ஆனால், இன்றைய இந்திய அரசின் அளவுகோலின்படி, அவர் மதிப்பீடு செய்யப்பட்டால், அவர் ஒரு "சர்வதேச பயங்கரவாதி".

 சே குவேராவுக்கு கூடுதல் சிறப்பு உண்டு. இப்போது விடுதலை கிடைக்காவிட்டால், உடனே, இருக்கும் அமைப்புக்குள் இணக்க அரசியலை ஏற்று, பதவிகளைப் பெற்றுக்கொள்ளும்படி, ஒருபோதும் அவர் அறிவுறுத்தியது இல்லை.

 விடுதலைபெற்ற கியூபாவின் பிரதிநிதியாக உலகம் முழுவதும் சே குவேரா பயணித்தார். 1959இல் சே குவேரா இந்தியா வந்தார். பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்துப் பேசினார்.  ஜவகர்லால் நேருவுக்கு கியூபா சிகரெட்டுகளை பரிசாக அளித்தார். விருந்து அளித்து சே குவேராவை சிறப்பித்தது நேருவின் குடும்பம். கம்யூனிசம், கியூபாவுடன் உறவு மேம்பாடு, மா.சே.துங்  பற்றி அதிகம் பேசினார் சே குவேரா.  நேரு பேசியதோ ஆப்பிள் பழங்களைப் பற்றி. பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும், நேருவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், நேரு, அரசியல் பிரச்சினைகளில் அவசரமாக சொற்களை விடாமல் இருந்தார் போலும்.

கல்கத்தா சென்ற சே குவேரா, மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் (காங்கிரசு) பி.சி. ராய் அவர்களைச் சந்தித்தார். ஆனால் எந்த கம்யூனிஸ்டும் சே குவேராவை சந்திக்க அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. கம்யூனிஸ்டுகளை சந்திக்க சே குவேராவும் முயன்றதாகத் தெரியவில்லை.

 சே குவேராவின் இந்திய வருகை பற்றி எழுத்தாளர் ஓம் தன்வி பதிவுகளைச் செய்துள்ளார். டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற கே.பி. பானுமதி சேகுவேராவை பேட்டி எடுத்து ஒளிபரப்பியவர். அவரிடம் இருந்து தகவல்களை ஓம் தன்வி பெற்றார்.

1964-இல் கியூபா படைப்பிரிவுடன் சே குவேரா காங்கோ படையெடுப்பில் ஈடுபட்டார். ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது.

 1967 மார்ச் மாதம் பொலிவியாவில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு, பொலிவிய இராணுவத்தைச் சிதறடித்தார். ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொலிவிய ராணுவம் சுற்றிவளைத்து சே குவேரா உள்ளிட்டு 17 பேரைக கைது செய்தது.  சே சுட்டுக் கொல்லப்பட்டார்.

 பொலிவியாவில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து, அவருடைய சடல எச்சங்கள், 1997 - இல் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டு, சான்டா கிளாராவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 இன்றளவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது, தேசிய இனங்களுக்கான தேசங்களை நிறுவுவது ஆகிய விடுதலைப் போராட்டங்களுக்குக் குறியீடாக சே குவேரா திகழ்கிறார்.

 சேகுவேராவிடமிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய பாடம் இதுதான்:

இந்தியச் சூழ்நிலையைக் கருதி, 'பிழைப்புவாத அரசியல் கொஞ்சம் எளிதாக இருக்கிறது, வாழும் காலத்தில் பிரச்சினையும் இல்லாமல் இருந்து கொள்ளலாம், அரசியலும்  நடத்திக் கொள்ளலாம்' -என்று கருதி, சில சுயநல முடிவுகளை எட்டி, மக்களைத் தவறாக வழிநடத்தி விடக்கூடாது என்பதுதான்.

 நம் கடமை சரியானதைச் சொல்லுவதுதான்; சாத்தியமானதைச் சொல்லுவது அல்ல.  நம்மால் சாதிக்க இயலவில்லை என்றால் அடுத்த தலைமுறை இப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொள்ளும். அந்த வாய்ப்பையே அவர்களுக்கு அளிக்காமல், நமக்குச் சரி என்று பட்ட பிழைப்புவாத அரசியலுக்குள் எதிர்கால சந்ததிகளையும் ஈர்த்து, வழிநடத்திக் கொண்டு போய் முடக்கி விடுவது என்பது இன துரோகமாகும். 

சே குவேரா போல் இனம்- மொழி- நாடு கடந்து விடுதலைப் போரில் பங்கேற்க இயலாவிட்டாலும், நம் மொழி -இன- நாட்டு விடுதலைக்கு உண்மையாகக் களத்தில் நின்றால் அதுவே சே குவேராவுக்கு நாம் அளிக்கும் மரியாதையாகும். 

தாம் ஏற்றுக் கொண்ட பொதுவுடைமைக் கொள்கைக்கு ஏற்ப, தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள தேசங்கள் அனைத்தையும், ஏகாதிபத்திய, சர்வாதிகாரப் பிடியிலிருந்து மீட்டு, மக்கள் தேசங்களாக அமைக்க பெருமுயற்சி செய்தார் சே குவேரா.

இன்றைய இந்தியச் சூழலில், இந்தியாவே ஒரு ஏகாதிபத்தியமாக மாறியுள்ள நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உடன்-பங்காளியாக மாறி, தேசிய  இனங்களை ஒதுக்குவதும், தேசிய இனங்களின் வளங்களைச் சுரண்டி தின்பதும், சூறையாடுவதும் ---- என்று இணைந்து செயல்படும் சூழலில், பொதுவுடமைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் அரசியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தங்கள் செயல் திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.  தம்முடைய தேசிய இனத் தாயகத்தை மீட்பது மட்டுமல்லாமல், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் உள்ள பிற தேசிய இனங்கள்  விடுதலை பெற்ற தேசங்களை அமைப்பதற்கும், அவை பொதுவுடமைத் தேசங்களாக அமைவதற்கும் துணை நிற்பதுதான், பொதுவுடமைத் தத்துவத்திற்கும், சே குவேரா போன்ற விடுதலைப் போராளிகளுக்கும் இந்தியத் துணைக கண்டத்து பொதுவுடைமையாளர்கள் அளிக்கும் மரியாதையின் அடையாளயாகும்.

 சே குவேராவுக்கு வீரவணக்கம்!

--- பேராசிரியர் த. செயராமன், 
     நெறியாளர்,
      தமிழ் மண் தன்னுரிமை இயக்கம
      09 அக்டோபர் 2020.


No comments

Powered by Blogger.