ஹத்ராஸ் போக விடாமல் காரை தடுத்த போலீஸ்.. நடந்தே சென்ற ராகுல் கைது- தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்தார்!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று செல்ல முயன்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டனர். எனவே வெயிலுக்கு இடையே சாலையில் இருவரும், தொண்டர்கள் புடை சூழ நடந்தே சென்றபோது ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே மண்தரையில் திடீரென விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இவர்கள் வருகையை ஒட்டி அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தன. எனவே ஹத்ராஸ் மாவட்ட எல்லையில் போலீசாரால் இவர்களின் கார்கள் தடுக்கப்பட்டன. எனவே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதுபற்றி ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் லஸ்கர் கூறுகையில், ராகுல் காந்தி வருகை தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் தெரியப்படுத்தவில்லை. இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக்குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை இன்று சந்தித்து விசாரணை நடத்த உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments