கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
இன்று (21-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி
ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார்.
மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில், மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க. அரசுடன் இணைந்து போராட, தி.மு.க. தயாராக இருக்கிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!
கழகத் தலைவர் அவர்கள் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை சிதைக்கும் நீட் தேர்வினை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானமான கோரிக்கை என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அக்கோரிக்கை நிறைவேறும் வரை, 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆராய, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. கலையரசன் அவர்கள் தலைமையில் மூத்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் “எம்.பி.பி.எஸ் மற்றும் நீட் தேர்வு மாநிலத்தில் தகுதித் தேர்வாக குறித்துரைக்கப்பட்டுள்ள பிற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற (NEET) அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை” அளிப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்களுக்கிடையே ஒரு சமத்துவத்தைக் கொண்டு வரலாம் என தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டது.
மேற்கண்ட முடிவின் அடிப்படையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் “Tamil Nadu Admission to Under Graduate Courses in Medicine, Dentistry, Indian Medicine and Homeopathy on preferential basis to the students of the Government Schools Bill, 2020” என்ற சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு- கடந்த 15.9.2020 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16.10.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்த கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட முடியும். ஆகவே, இந்தச் சட்ட முன்வடிவினை ஆதரித்து நிறைவேற்றிய பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மேற்கண்ட சட்டமுன்வடிவிற்கு உடனடியாகத் தாங்கள் ஒப்புதல் அளித்து - அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புள்ள,
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்.
No comments