எஸ்.டி. பெண் பஞ். தலைவரை மிரட்டிய அதிமுக நிர்வாகி: கூடலூரில் பரபரப்பு
கூடலூர்: பழங்குடியின (எஸ்.டி.) பெண் ஊராட்சி தலைவரை மிரட்டிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.எஸ்பி.யிடம் புகார் தரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் கூட அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது. தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் உள்ளார். இவர் நேற்று கூடலூர் டி.எஸ்பி. மற்றும் கூடலூர் போலீசில் அ.தி.மு.க. பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தன்னை தரக்குறைவாக திட்டி மிரட்டியதாக புகார் மனு அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 20ம் தேதி தலைவர் அறையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆனந்தராஜ் மகேசன் மற்றும் துணை தலைவர் தாமோதரன் ஆகியோருடன் வளர்ச்சி பணி சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தேள். அப்போது, அ.தி.மு.க.வை சேர்ந்த பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் அவருடன் சில நபர்கள் எந்தவித அனுமதியின்றி அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். நான் ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர், நான் சொல்கிற நபர்களுக்குத் தான் டெண்டரில் நீ பணிகளை ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னை நிர்வாகம் நடத்த விடமாட்டேன் என்று ஒருமையில் பேசியதோடு, நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. என்று மிரட்டினார்.மேலும், நீ ஆதிவாசி தலைவர்.
என் முன் உட்கார்ந்து பேச எந்த தகுதியும் இல்லை. நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் வரை எப்படி தலைவர் வேலையை பார்ப்பாய் என எனது ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால், அனைவர் முன்னிலையில் கேவலப்படுத்தும் வகையில் பேசினார்.21ம் தேதி காலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் தலைவர் அறையில் இருந்து டெண்டர் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க. நிர்வாகி செல்வகுமார் தூண்டுதலின்பேரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கான்ட்ராக்டர்கள் யோகேஸ்வரன் மற்றும் பேபி இருவரும் அத்துமீறி எனது அறைக்குள் நுழைந்து, ‘நாங்கள் சொல்கிற ஆட்களுக்குத்தான் வேலை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் டெண்டரை நடத்த விடமாட்டோம்’ என்று தகராறு செய்தனர்.இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments