கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி, 4 வீடுகளில் கொள்ளை: லேப்டாப், பைக் அபேஸ்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
கும்மிடிப்பூண்டி அருகே நேற்றிரவு ஒரு அரசு பள்ளி மற்றும் 4 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இதில் லேப்டாப், பைக் மற்றும் ஆடுகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு நேற்று அதிகாலை முதலே நள்ளிரவு வரை பலத்த இடியுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், அக்கிராமத்தில் தபால் தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி (46). தனியார் பள்ளி ஆசிரியர். இவரது வீட்டின் பின்பக்க கதவை நேற்றிரவு மர்ம நபர்கள் அரிவாளால் உடைக்க முயன்றனர். கதவு உடைக்கும் சத்தம் கேட்டு கோபி அலறி சத்தம் போட்டார். இதனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
பின்னர் தேவராஜ், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் வீடுகளில் மர்ம நபர்கள் கடப்பாரையால் கதவை உடைத்துள்ளனர். அங்கு பொருட்கள் எதுவும் மர்ம நபர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் மதிமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் வீட்டுக்கு முன் நின்றிருந்த பைக் மற்றும் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இதைத் தொடர்ந்து தேர்வழி கிராமத்தை ஒட்டியுள்ள அரசு தொடக்க பள்ளியின் கதவை மர்ம நபர்கள் உடைத்தனர். அங்கிருந்த சவுண்ட் பாக்ஸ், ஒரு லேப்டாப் மற்றும் சிறுவர்கள் சேமித்து வைத்திருந்த 1,750 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இப்புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து அரசு பள்ளி மற்றும் 4 வீடுகளில் கொள்ளை நடைபெற்றது அக்கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
No comments