பிரதமரின் வீடு கட்டும் திட்டம் விவகாரம் இரண்டு ஊராட்சி செயலாளர்கள் சஸ்பெண்ட்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பொம்மூர் ஊராட்சி. இதன் செயலாளர் குமார், கொடூர் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இரண்டு ஊராட்சிகளிலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்படி கடந்த மூன்று வருடங்களாக வீடு கட்டும் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகள் ஊராட்சி செயலாளர்களிடம் வலியுறுத்தி வந்த நிலையில் பணிகளை விரைந்து முடிக்காமல் மேலும் மேலும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரனுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். அதனடிப்படையில் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கொடூர், பொம்பூர் ஆகிய இரண்டு ஊராட்சி செயலாளர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி செயலாளர் தரப்பில் விசாரித்தபோது பயனாளிகளை வீடு கட்டுமாறு பல்வேறு முறை நாங்கள் நேரில் சென்று வலியுறுத்தி வருகிறோம் அவர்கள் பணியை விரைந்து முடிக்காமல் இருப்பதற்கு நாங்கள் மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும். எந்த ஒரு அரசு திட்டத்தையும் அதன் பணிகளையும் அதிகாரிகள் முதல் கீழே உள்ள பணியாளர்கள் வரை ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியில் தான் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. அப்படியிருக்கும்போது பணிகள் முடிப்பதற்கு காலதாமதம் ஆவதற்கு நாங்கள் மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் ஊராட்சி செயலாளர்கள்.
No comments