கொரோனாவின் கூடாரம்! ஹோட்டல் பற்றி தப்பாக எழுதிய ஆசிரியர் கைது!
✍️ | மகிழ்மதி.
தாய்லாந்து ஓட்டல் பற்றி இணையத்தில் தவறாக எழுதியதற்காக அமெரிக்க நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கரான வெஸ்லி பார்ன்ஸ் தாய்லாந்து நாட்டில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் கோ சாங் தீவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த மது பாட்டிலை எடுத்து அங்கு வைத்து குடித்தார். இது அந்த ஓட்டலின் விதிமுறைகளின்படி தவறான செயலாகும். எனவே ஓட்டல் நிர்வாகம் பார்ன்ஸ்க்கு அபராதம் விதித்திருக்கிறது.
இதனால் கோபமடைந்த பார்ன்ஸ், அபராதத்தை கட்ட முடியாது என ஓட்டல் நிர்வாகத்தினருடன் சண்டை போட்டிருக்கிறார். இதையடுத்து அவரிடம் எந்த அபராதமும் வாங்காமல் அனுப்பிவிட்டனர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்த பார்ன்ஸ், அந்த ஓட்டல் குறித்து பயண இணையதளம் ஒன்றில் தவறாக விமர்சனம் எழுதினார். அந்த ஓட்டலை கொரோனாவின் இருப்பிடம் என்றும், ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்றும் பார்ன்ஸ் தனது பதிவில் வசைபாடியிருந்தார்.
இதைப்பார்த்த ஓட்டல் நிர்வாகம், பார்ன்ஸ் பொய்யான விஷயங்களை எழுதி, தங்களை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டிருப்பதாக காவல் துறையில் புகார் அளித்தது. இதையடுத்து பார்ன்ஸ் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் அவரை கைது செய்து இரண்டு நாட்கள் சிறையில் அடைத்தனர். பின்னர் பிணைத்தொகையை கட்டி அவரே வெளியில் வந்தார்.
பார்ன்ஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஏழு ஆண்டுகள் வரை சிறையில் இருக்க நேரிடும் என தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவாகாரத்தால் பார்ன்ஸ்ன் வேலையும் பறிபோய்விட்டது
No comments