இன்றைய முக்கிய செய்திகள் 04 நவம்பர் 2020
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* இராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்டபம் வேதாளை கடல் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
* நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 72 வயது விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இடையன்குளம் கிராமத்தில் விவசாயி செல்வகனியை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.
* சென்னை: விருதுகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நர்மதா.. 38 வயசு. இப்போது சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறும் வெற்றிவேல் யாத்திரையை கண்டித்து போராட்டத்தில் நர்மதா ஈடுபட்டார். அண்ணாநகர் பெரிய தெருவில் உள்ள சேக்கிழார் மணிமண்டபம் முன்பு, தனது காதில் தானே மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டம் செய்தார். வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் தமிழர்களின் காதில் பாஜக தலைவர் எல்.முருகன் பூ சுற்றுவதாகவும், இந்த வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் நர்மதா வலியுறுத்தினார்.
* கோவை மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
* விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருகிராம மீனவர்கள் நடுக்கடலில் திடீரென மோதிக்கொண்டனர். மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் இரு கிராம மீனவர்களும் மோதிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எக்கியர் குப்பம் மீனவர்கள் பைப்பால் தாக்கியதில் புதுக்குப்பத்தைச் சேர்ந்த 9 பேர் காயம் அடைந்தனர். நடுக்கடலில் மீனவர்கள் மோதல் தொடர்பாக மரக்காணம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
* திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமமூர்த்தி, ஜெகன்நாத், கருப்பையா, அர்ச்சுணன், பாலா ஆகியோரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய கணினி, பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
* திருவாரூர் மாவட்டம் மேலமருதூரில் ஜீப் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே பால கட்டுமான பணியில் இருந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது.
* சென்னையில் உள்ள எஸ்பிளனேடு, ஏழுகிணறு, சிந்தாதிரிப்பேட்டை மின்வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
*கோவை நகரில் அதிகாலை முதல் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் 32 ரவுடிகள் பிடிபட்டனர். கட்ட பஞ்சாயத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
*சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது.
* சென்னை அடுத்த ஆவடி 18வது வார்டு பகுதியில் குப்பை கிடங்கை முற்றிலுமாக அகற்ற அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மாதமாக கிடங்கு பராமரிப்பின்றி இருப்பதால் குப்பைகள் தேக்கமடைந்து துர்நாற்றம் வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.
* தூத்துக்குடியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 4 யானை தந்தங்களை தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி, இருவரை கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டினார்.
* இராமநாதபுரம்: உச்சிப்புளி அடுத்த புது மடத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழைய இந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மாற்று மதத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, இந்து முன்னணியினர் சாலை மறியல். 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரியில் குட்டியானை இறப்பில் பரபரப்பு திருப்பம்: துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உடலை அகழியில் வீசி சென்ற கும்பல். பிரேத பரிசோதனையில் உடலில் இருந்து 3 குண்டுகள் எடுக்கப்பட்டன.
* நாகையில் மகளிர் குழுவினர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற தேர்தலில் களமிறங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டத்திலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அக்கரைகுளம் உள்ளிட்ட பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து ரஜினிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்ற அவர்கள், வருகிற சட்டபேரவைத் தேர்தலில் ரஜினிகாந்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
* தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாய நிலத்தில் ஆடு மேய்த்த தகராறில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் கொலையாளிகளின் வீடுகள் மீது கல் வீசி தாக்கி, வாகனங்களை தீவைத்து கொளுத்தியதால் பதற்றமான சூழல் காணப்பட்டது. விவசாயி ராமையா தாஸ் பாஜக அமைப்பு சாரா பிரிவில் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளர். ராமையாவின் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை.
No comments