Header Ads

விவசாயிகள் விலை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா, விவசாய விலை பொருட்கள் விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய 3 அவசர கொள்கை முடிவு குறித்தான வரைவு மசோதாக்கள் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்


மத்திய அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வந்திருப்பதாக சொல்லப்படுகிற விவசாயிகள் விலை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா, விவசாய விலை பொருட்கள் விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய 3 அவசர கொள்கை முடிவு குறித்தான வரைவு மசோதாக்கள் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் மேலும் கார்ப்ரேட்டுகளிடம் விவசாயிகளையும், விளை நிலங்களையும் அடிமைபடுத்த வழி வகுக்கும். ஆன்லைன் டிரேட் அனுமதிப்பதால் உலக வர்த்தக சூதாடிகளின் வியாபாரக் கொள்ளைக்கு அடிபணிய வேண்டும். கோயம்பேடு உள்ளிட்ட பெரும் வணிக சந்தைகள் கார்ப்ரேட்டுகள் கைப்பற்றக் கூடும்.

அது மட்டுமின்றி ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளை தனியாரிடம் விற்பனை செய்துள்ள நிலையில் வேளாண் பொருளாதார கொள்கைகளிலிருந்தும் அரசு முற்றிலும் தன்னை விலக்கி கொள்ளும் மறைமுக சூழ்ச்சி ஆகும்.  

குறிப்பாக பிரதமர் கெரோனா தாக்குதல் துவங்கியது முதல் ஊடகம் மற்றும் வானொலி மூலமாகவும் பேசியபோது அவர் முதலில் சொன்னது உலகத்திலேயே இந்தியாவில்தான் உணவு உற்பத்தி மிகையாக உள்ளது. கொரோனா தாக்குதலால் உலகம் முழுமையிலும் உணவு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாதான் உலக நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது, இதனால் இந்தியாவினுடைய பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 

குறிப்பாக இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்தாலும் விவசாயிகள் கடுமையாக உழைத்து விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கும் விவசாயிகள் உற்பத்தியை பெருக்குவதற்கும்  விரைவில் அதற்கான சட்டங்களை கொண்டு வரப்போகிறோம் என்று அறிவித்தார். அதுமட்டுமல்ல நாங்கள் இரட்டிப்பு விலை கிடைப்பதற்கு ஆன்லைன் டிரேட் என்று சொல்லக்கூடிய யூக பேர வணிகத்தை அனுமதிக்கப் போகிறோம் என்று சொன்னார். 

இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதற்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி அளிப்போம் என்று சொன்னார் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த போகிறோம் என்று சொன்னார் அடுத்து இந்தியா முழுமையிலும் தடையற்ற ஒப்பந்தம் என்று அறிவித்தார். இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவு பொருட்களான வெங்காயம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவித்தார். விவசாயி தொடர்ந்து தன்னுடைய வருவாயை பெருக்குவதற்கான தீவிர அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தான் தற்போது மூன்று தலைப்பின் கீழ் ஏற்கனவே இருக்கிற கொள்கை சட்டத்தை திருத்தம் என்ற பேரில் புதிய கொள்கை மசோதாவை கொண்டு வந்திருக்கிறார். 

இச்சட்டம் மத்திய, மாநில அரசுகளின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது. வேளாண்துறை மாநில அரசுகளின் பட்டியலில் இருக்கின்றன. மத்திய அரசு இந்த சட்டம் மூலமாக  மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதற்கான வகையில் வழிவகுக்கிறது. 

குறிப்பாக இந்த கொள்கை மசோதா மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து மத்திய அரசின் கையில் கொண்டு போய் அதிகாரக் குவியலை உருவாக்குவதற்கான முயற்சியாக கொண்டு வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இன்றைக்கு (எம்.எஸ்.பி) விலை நிர்ணயம் செய்கிற கொள்கை, வர்த்தகம் குறித்த உலகளாவிய கொள்கை முடிவும் அந்நிய பெருமுதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்களை களமிறக்கும் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் அதற்கான வழிமுறைகளை உருவாக்கும் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு கையில் இருக்கிறது.

அதே நேரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விவசாயிகளுக்கு கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையாக செயல் திட்டங்களை உருவாக்கி அதனைச் சட்டமாக்கி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது. மத்திய அரசின் கொள்கைத் திட்டத்தை பின்பற்றிதான் மாநில அரசுகள் செயல்பாட்டிற்கான நிர்வாக அனுமதிகளை வழங்க முடியும். 

இந்நிலையில் மத்திய அரசு புதிய வரைவு மசோதா கொள்கை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான வகையில் அவர்கள் கிடங்குகள் அமைத்துக் கொள்ளவும், ஆன்லைன் டிரேடை அனுமதித்திருக்கிறார்கள், இதன் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி)  நிர்ணயம் செய்யும் நடைமுறையையே மசோதாவில் குறிப்பிடாமல் கைவிட்டுள்ளது.  இதனால் மத்திய மாநில அரசுகளின் குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் பறிபோகிறது. 

மேலும் தற்போது உணவு கழகம் (எப்சிஐ) கொள்முதல் மூலமும், மாநில அரசுகளின் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்வதால் எம்.எஸ்.பி உத்தரவாதம் உள்ள்ளது. வெளிச்சந்தையில் கொள்முதல்விலை அதிகரிகும் நிலையில் விரும்பிய வணிகர்களிடம் விற்பனை செய்ய முடியும் வகையில் இரட்டை கொள்முதல் முறை நடை முறையில் உள்ளது.

புதிய மசோதா மூலம் ஆன்லைன் டிரேட் அனுமதிப்பதால் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அங்கே இருக்கிற கார்ப்பரேட்  நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சூதாடிகள் நம் நாட்டு உற்பத்தி பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியும். அப்படி நிர்ணயம் செய்யும் போது உலக நாடுகளோடு இந்தியாவை ஒப்பிடுகிறபோது இந்தியாவில் விவசாய உற்பத்தி செலவு பல மடங்கு கூடுதலாக இருக்கிறது. எனவே உலகளாவிய சந்தையில் விலையை நிர்ணயம் செய்கிற போது இந்தியாவின் உற்பத்தி செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் அடியோடு மறுக்கப்படும்.

விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் கொள்முதல் காலத்தில் மிகை உற்பத்தி இருக்கும் பட்சத்தில் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அதனை இந்திய கிடங்குகளில் இருப்பு வைத்து விரும்பிய நாடுகளில் விரும்பிய இடங்களில் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் கொள்முதல் விலையை விட பல மடங்கு அதிகம் விலையை உயர்த்தி விற்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். குறிப்பாக இந்த சட்டம் பதுக்கல் காரர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் பேரிடர் காலங்களில் உணவு தட்டுப்பாடு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் கிடங்குகளில் இருப்பு உள்ள பொருளை மக்களுக்கு வெளிக்கொண்டுவந்து விநியோகம் செய்ய அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது இந்த சட்டமூலம் அந்த அதிகாரம் பறிக்கப்படுகின்றனர்.

ஒப்பந்த சாகுபடி முறை என்ற பெயரில்  விவசாயிகளிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்த செய்து உற்பத்திக்கான விதை உள்ளிட்ட தொழில் நுட்பங்கள், இயந்திரம், இடுபொருட்கள் வழங்குவார்கள். அவ்வாறு வழங்கப்படும் விதை உயரிய விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு விதைகளான மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஆக இருக்கலாம்.  ஆபத்து விளைவிக்கக்கூடிய விதைகளையும் அவர்கள் வழங்குவார்கள். அப்படி வழங்கும் போது கடும் நோய் தாக்குதல்களை எதிர்கொள்ள உற்பத்தி பொருளை நஞ்சாக்கும் பூச்சி  கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தி உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை உண்ணும் பொதுமக்கள் மருந்தில்லா உயிர்கொல்லி நோய் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.

இவ்வாறாக கடந்த காலங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தியை சாகுபடி செய்த விவசாயிகள் பூச்சித் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல் பேரழிவை எதிர்கொள்ள முடியாமல் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் 3.50 லட்சம் விவசாயிகள் தற்க்கொலை செய்து இறந்தார்கள்.

உதாரணத்திற்கு ஒப்பந்த முறையில் கடந்த ஆண்டு பெப்சி நிறுவனத்தோடு குஜராத் மாநிலத்தில்  உருளைக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளிடம் கொள்முதல் காலத்தில் இந்தியாவில் உருளை கிழங்கு மிகை உற்பத்தியானதால் ஒப்பந்த அடிப்படையில் உரிய விலை கொடுத்து உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கு பெப்சி நிறுவனம் மறுத்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதனை வெளிச்சந்தையில் விற்க முற்பட்டார்கள். அதனை எதிர்த்து பெப்சி நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றது. இந்த நிலையில் பிரச்சனை வெளிவந்தவுடன் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறச் செய்தது.

இந்நிலையில் ஒப்பந்த சாகுபடி (Contract farming) என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் குறிப்பாக தான் சொல்லும் பயிரைதான் பயிரிட வேண்டும் என்று சொல்வார்கள். பின்னர் நாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு கொள்முதல் செய்ய முடியும் என்ற நெருக்கடி செய்வார்கள். அவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் போது அதனை எதிர்கொள்ள முடியாத விவசாயிகளிடம் ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து தானே நேரடியாக நிலத்தை சாகுபடி செய்து கொண்டு விளை நிலத்தை விட்டு வெளியேற்றி விட்டு நிலத்தை அபகரிக்கும் மறைமுக நெருக்கடிகளை விவசாயிகளுக்கு தருவதற்கான வாய்ப்புள்ள சட்டமாக கொள்கையாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.

எனவே விவசாய விளை நிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆதிக்கம் மட்டுமின்றி அபகரிப்பதற்கும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தீர்ப்பாயங்கள் குறிப்பாக வட்டாட்சியர், கோட்டாட்சியர் அரசால் நிர்ணயம் செய்யக்கூடிய அரசுத்துறை நிறுவனங்களில் தான் நீங்கள் முறையீடு செய்ய முடியும். தற்போதைய நிலையில் மத்திய, மாநில அரசுகக்கோ, நீதிமன்றங்களுக்கோ கட்டுப்படாத கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது கொண்டு வரப்படும் தீர்ப்பாயங்கள் மூலம் விவசாயிகளுக்கு சாதகமாக தீர்வு கிடைக்குமா? என்பது இந்த சட்டத்தின் கேள்விக்குறியாக இருக்கிறது.

எனவே இந்த சட்டம் ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளுக்கு எதிரானது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது மாநில அரசுகளின் அதிகாரம் இக்கொள்கையின் மூலம் பறிக்கப்படும்.

இந்நிலையில் தமிழக அரசாங்கம், தாங்கள் 2019 ல் கொண்டு வந்திருக்கிற ஒப்பந்த சாகுபடி சட்டத்தை பின்பற்றி தான் மத்திய அரசு  கொள்கையைக் கொண்டு வருகிறது என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது. ஆன்லைன் டிரேட், அந்நிய முதலீடுகள் அனுமதிப்பதால் மாநில அரசுகள் பின்பற்றி வரும் கொள்முதல் மற்றும் ஒப்பந்த சாகுபடி சட்டங்கள் நீர்த்து போகும்.

ஒட்டுமொத்தமாக இந்திய விவசாய கொள்கை, சந்தை முற்றிலும் கார்ப்பரேட் கைகளுக்கு போகிறது எனவே இந்த கொள்கை சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் தமிழக அரசால் போடப்பட்ட 2019 சட்டம் காலாவதி ஆகிவிடும். மத்திய அரசின் கொள்கைக்கு உட்பட்டுத்தான் கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து மட்டுமே மாநில அரசுகள் கொள்முதல் சட்டம் உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இந்தியாவிலேயே மாநிலத்திற்கு மாநிலம் கொள்முதல் முறை மாறுப்பட்டதாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில்தான் ஏற்கனவே இருக்கிற சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பானதாக உள்ளது. இங்கேதான் இரட்டை கொள்முதல் முறையில்  மூன்று முறைகளில் பின்பற்றப்படுகிறது குறிப்பாக (எப்.சி.ஐ) முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவர் சந்தைகள், மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சந்தைகள் மூலம் தமிழக அரசால் எம்எஸ்பிக்கு குறைவில்லாமல் விற்பனையை உத்தரவாதப்படுத்த படுகிறது.

இதைவிடக் கூடுதலாக வெளிச்சந்தையில் விலை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள் தனியார் வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இந்த நடைமுறைகளை பின்பற்றி தமிழக அரசு கொண்டு வந்திருக்கிற 2019 சட்டமும் இனி மத்திய அரசின் கொள்கை திட்டங்களுக்கு உட்பட்டு மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய நெருக்கடி ஏற்படப் போகிற பேராபத்தை தமிழக அரசு உணர வேண்டும்.  குறிப்பாக வரும் 2021 மத்திய அரசினுடைய கொள்முதல் குறித்தான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு முழுமையும் இதனை பின்பற்றி தான் இருக்கும். அவ்வாறு வரும் பட்சத்தில் முதல் நெருக்கடியை தமிழக விவசாயிகளுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்படும்.

குறிப்பாக மத்திய அரசின் முகவராக தமிழ்நாட்டில் நெல் கொள்முதலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசிடம் முன் பணம் பெற்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  நெல் கொள்முதல் செய்யப்படுகிறது அதனை அரிசியாக மத்திய தொகுப்பு கொடுத்துவிட்டு, பொது விநியோகத் திட்டத்திற்கு கிலோ அரிசி விலை ரூபாய் இரண்டு என்ற அடிப்படையில் மீண்டும் தமிழக அரசு பெற்றுக்கொள்கிறது.

இக்கொள்கை மசோதா மூலம் இனிஉணவு கழகமே இருக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது காரணம் கார்ப்பரேட்டுகளிடமே இந்திய மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை மத்திய, மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். இதனால் விவசாய உற்பத்தி அடியோடு பாதிக்கப்படுகிற பேராபத்து ஏற்படும்.

எனவே தமிழக அரசு தாங்கள் கொண்டு வந்த சட்டத்தை பின்பற்றி மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக சொல்லுகிற செய்தி ஏற்கத்தக்கதல்ல. எந்த ஒரு கட்டத்திலும் மத்திய அரசின் கொள்கை திட்டத்திற்கு உட்பட்டுத்தான் மாநில அரசுகள் செயல்பட வேண்டுமே, தவிர மாநில அரசுகள் தன் விருப்பத்துக்கு கொள்முதல் கொள்கைகளில் மாற்றம் செய்ய முடியாது என்பதை தமிழக முதலமைச்சர் உணர வேண்டும் மேலும் தமிழக அரசாங்கம் மத்திய அரசுக்கு தற்போது நடைமுறையில் இருக்கிற இரட்டை கொள்முதல் முறை அதனை பின்பற்றி குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் (எம்.எம்.பி) செய்வதையும் மத்திய அரசு கைவிட கூடாது கார்ப்பரேட் கையில் ஆன்லைன் மூலமாக கொள்முதல் செய்வதை அனுமதிக்க கூடாது. இதனால் சிறு குறு உள்நாட்டு வணிகம் அடியோடு அழியும்.

மத்திய மாநில அரசுகளின் தற்போதைய கொள்முதல் கொள்கைகளைப் பின்பற்றி விவசாயிகளோடும் உள்நாட்டு வணிகர்களோடும் மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்து கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்துவதற்கான சந்தை கொள்கைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஒப்பந்த சாகுபடி முறை என்பது மாநில அரசுகள் வேளாண்துறை மூலமாக தான் விவசாயிகளிடமும் தனியார் நிறுவனங்களிடமும் ஒப்பந்தம் செய்வதை  பொறுப்பேற்க வேண்டும். 

எந்த நிலையிலும் விவசாயிகள் தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய இயலாது. உண்மை இவ்வாறு இருக்க பதுக்கல்காரர்களுக்கு துணையாக கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது. அப்படி கள்ளச்சந்தையில் விற்பதற்காக இருப்பு வைக்க கூடிய பொருட்களை தட்டுப்பாடு காலத்தில் பொதுச் சந்தைக்கு கொண்டு வருகிற மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது. என்பதையும் பிரதமருக்கு முதலமைச்சர் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இதனடிப்படையில் கொள்கை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருகிற போது விவசாயிகள் ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. 

எனவே மத்திய அரசு இந்த மூன்று கொள்கை சட்டங்களால் விவசாய கொள்கையிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டு வெளியேறும் உள்நோக்கத்தோடு இந்த சட்டம் கொண்டுவரப் படுகிறதோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

விவசாயம் மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கான நிதி சுமை மத்திய அரசால் ஏற்க முடியாத நிலை இருப்பதால் அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டிய நெருக்கடியில் தான் இந்த கொள்கை மசோதாவை  கொண்டு வருகிறோம் என்று வெளிப்படையாக மத்திய அரசு சொல்கிறது.

எனவே இந்த கொள்கை நிலையிலிருந்து மத்திய அரசு வெளியே வரவேண்டும். இந்திய நாடு என்பது 85% சதவிகிதம் சிறு, குறு விவசாயிகளை கொண்ட நாடு. வாழும் மக்கள் தொகையில் 80% பேர் நேரடியாக விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் பெரும்பான்மை மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு தனது நிதி வருவாய் மூலமாக மட்டுமே தான் மேம்படுத்த வேண்டுமே தவிர, அந்நிய முதலீடுகளை அனுமதிக்கிறோம் என்கிற பெயரில் விவசாயிகளைளையும் அந்நிய கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் அடகு வைப்பதை ஏற்க முடியாது.

எனவே தற்போதையை புதிய மசோதாவில் உள்ள பாதிக்கும் வகையில் உள்ளவைகள் குறித்து மத்திய  அரசு மறுபரிசீலனை செய்து விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் பாதுகாப்பான கொள்கைத் திட்டங்களை கீழ்கண்டவாறு மாறியமைக்க வேண்டும்.

1) கார்ப்ரேட்டுகளிடம் ஒப்பந்த சாகுபடி என்பதை கைவிட்டு, வேளாண் துறை மூலம் மாவட்டங்கள் தோறும் விவசாயிகளுடனும், உள்நாட்டு ச வியாபாரிகளுடனும் ஒப்பந்தம் செய்து, சந்தை படுத்துவதற்கும், விலை உத்தரவாதமளிக்கவும், உரிய பயிர்களை சாகுபடி செய்வதற்கான நிலையை உருவாக்க வேண்டும்.

2) ஆன்லைன் டிரேட் (யூக பேர வர்த்தகம் அனுமதிப்பதை ரத்து செய்து குறைந்த பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) நிர்ணயம் செய்வதை கொள்கை திட்டத்தில் உறுதி செய்து இரட்டை கொள்முதல் முறை தொடர்ந்திட வழி காண வேண்டும்.

3) வேளாண்மை மேம்பாட்டிற்கும், உற்பத்தி பெருக்கத்திற்கும் அந்நிய முதலீடுகள் அனுமதிப்பதை கைவிட்டு,அரசே நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்திட வேண்டும். 

இதனை தொடர்ந்து பாதுகாப்பான விவசாய உற்பத்தி மற்றும் உள்நாட்டு வணிகர்கள் மூலம் சந்தைப்படுத்தல் சட்டங்களை செயல்படுத்துவதற்கு உரிய உத்தரவாதத்தை தமிழக அரசும் அளிக்க வேண்டும் என்று  வலியுறுத்துகிறோம். என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.