Header Ads

பீகார் தேர்தலில் தில்லு முல்லு: -தொல். திருமாவளவன்


பீகார் தேர்தலில் தில்லு முல்லு:  சனநாயகத்தைக் காப்பாற்றத் தேர்தல் ஆணையமும் ஆளுநரும் தமது கடமைகளைச் செய்ய முன்வரவேண்டும்!

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல் பிஜேபி கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் அது சனநாயகப் படுகொலையாகும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

பீகார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டி வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையமும்  பீகார் மாநில ஆளுநரும் சட்டபூர்வமான தனது கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆர் ஜே டி தலைமையிலான கூட்டணி 119 இடங்களில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் முதலில் உறுதிப்படுத்திவிட்டு பின்னர் மாற்றி அறிவித்தது என்று பட்டியலோடு விவரங்களை வெளியிட்டு அக்கூட்டணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளித்துள்ளனர். பல இடங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை நீக்கிவிட்டு பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாகப் பல தொகுதிகளில் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. எனவே புகார் கூறப்பட்ட தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள்  அறிவிக்கப்படும்வரை யாரையும் பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என்று ஆளுநரை வலியுறுத்துகிறோம். அதை மீறி ஆளுநர் செயல்பட்டால் அது ஜனநாயகப் படுகொலையாகவே இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தற்போது வந்துள்ள தேர்தல் முடிவின் படியேகூட ஆர்ஜேடி தான் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. எனவே ஆளுநர் முதலில் அக்கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்கவேண்டும். அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போது தான் அதற்கு அடுத்த பெரிய கட்சியாக இருக்கின்ற பாஜகவுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த அரசியலமைப்புச் சட்ட கடமையை ஆளுநர் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பாஜகவால் தனித்து களம் இறக்கப்பட்ட லோக் ஜன சக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று செல்வாக்கை இழந்து உள்ளது. திரு ராம் விலாஸ் பாஸ்வானுக்குப் பிறகு அக் கட்சியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய கேள்வியை இது எழுப்பியுள்ளது. திரு ராம்விலாஸ் பாஸ்வான்  அவர்கள் உயிரோடு இருந்தவரை மற்றவர்களால் ஆட்டி வைக்கப்பட முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தார். அதன் காரணமாகவே பீகாரிலும் தேசிய அரசியலிலும் அவருக்கு முக்கியத்துவம் இருந்தது. இதை சிராக் பாஸ்வான் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காகத் தனது அரசியல் எதிர்காலத்தையே அவர் கெடுத்துக்கொள்ளக்கூடாது  என்று கேட்டுக்கொள்கிறோம்.

பீகாரில் 16% வாக்காளர்களைக் கொண்ட தலித் வாக்குகளை பிரித்து சிதறடித்ததன் மூலம் அவற்றை மதிப்பிழக்கச் செய்திருக்கிறது பாஜக. அந்த அணியில் இடம்பெற்ற திரு. மாஞ்சியின் மகாதலித் கட்சி  4 இடங்களிலும், தனித்துப் போட்டியிட்ட பிஎஸ்பி ஒரு இடத்திலும், எல்ஜேபி ஒரு இடத்திலும் வென்றிருக்கின்றன. தற்போது மாஞ்சியின் 4 இடங்களை வைத்துத்தான் பாஜக அணி பெரும்பான்மையைக் கோருகிறது. அப்படியிருக்கும்போது  பிஜேபி கூட்டணி மாஞ்சியை ஏன் முதலமைச்சர் ஆக்கக்கூடாது?      

தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின்மூலம் நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவிக்குத் தகுதி இல்லாதவர் என்பதை பீகார் மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே பீகார் மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக நிதிஷ் குமாரை முதலமைச்சராக திணிப்பதற்குப் பதிலாக மாஞ்சியை ஏன் பாஜக முதலமைச்சராக முன்மொழியக் கூடாது? அதை ஏன் சிராக் பாஸ்வான் வலியுறுத்தக்கூடாது?

பீகாரைப் போல மிகவும் கடுமையான போட்டி நிலவும் தேர்தல்களின் போது தேர்தல் ஆணையத்தின் பங்கு மிக முக்கியமானதாக மாறிவிடுகிறது. மாநில அரசைச் சேர்ந்த அதிகாரிகளையும், ஊழியர்களையும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்துவதால் ஆட்சியில் இருப்பவர்களுடைய சொற்படி அவர்கள் நடக்க வேண்டியுள்ளது. எனவே தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத விதத்தில் முடக்கிவைக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தியா ஒரு தேர்தல் ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட நாடு எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து சட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முன் வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.