உயர்நீதிமன்றம் பாராட்டு: அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்குக! -ப ம க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிகமாகவும் நியமிக்கப்படும் பேராசிரியர்களில் பெரும்பாலோர் திறமையற்றவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கைக்கு முடிவு கட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் பாராட்டு. ஒப்பந்த ஆசிரியர்கள் மீதான பார்வை மாறுவதற்கு உயர்நீதிமன்றப் பாராட்டு வகை செய்தால், அது அவர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்கும் போது தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், ஒப்பந்த பேராசிரியர்களுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், அப்பல்கலைக்கழகம் கடந்த பல ஆண்டுகளாகவே தற்காலிக ஆசிரியர்களை நம்பித் தான் நடத்தப்பட்டு வருகிறது என்பது பெரும் சோகம் ஆகும். அண்ணா பல்கலைகழகத்தில் மொத்தம் 1504 பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், 556 பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பேராசிரியர்கள் அனைவரும் மிகக்குறைந்த ஊதியம் பெரும் தற்காலிக ஆசிரியர்கள் ஆவர்.
தற்காலிகப் பேராசிரியர்களை வைத்துக் கொண்டு தான் அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசையில் முன்னணியில் இருந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியில் வரும் பொறியாளர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதை தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர், ‘‘மாணவர்கள் மிகச்சிறந்த அறிவுக்கூர்மை உடையவர்களாக இருக்க வேண்டும் அல்லது தற்காலிக பேராசிரியர்கள் அசாதாரணமாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் இது சாத்தியம்’’ என்று பாராட்டியிருக்கிறார். நீதியரசரின் பாராட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பது தான் உண்மையாகும்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 8000-க்கும் கூடுதலான ஒப்பந்த பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரப் பணியாளர்களை விட இவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் ஆகும். உண்மையில் இவர்கள் தான் கற்பித்தல் பணியை, நிரந்தர பேராசிரியர்களுடன் இணைந்து தங்களின் தோள்களில் தூக்கிச் சுமக்கின்றனர். அரசு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குவதற்கு இவர்களின் உழைப்பே காரணமாகும்.
பல ஆண்டுகளாக மிகக்குறைந்த ஊதியத்தில் மிக அதிக நேரம் இவர்கள் பணி செய்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு பணி நிலைப்பு என்ற கோரிக்கை எழும் போதெல்லாம் திறமை இல்லை என்ற அலட்சியமான பதிலைக் கூறி, நிர்வாகங்களால் அவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர். ஆனால், அவை உண்மையல்ல... ஒப்பந்த பேராசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள் என்பது உயர்நீதிமன்ற நீதிபதியின் பாராட்டு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக ஒப்பந்த பேராசிரியர்கள் திறமையானவர்கள்; தகுதியானவர்கள் என்பதை நானே பலமுறை கூறியிருக்கிறேன்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களில் 30 விழுக்காட்டினர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ளவர் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள். அவர்கள் அனைவரும் முறையான தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளாக இதே பணியில் நீடிக்கின்றனர். 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்படும் இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களைப் போன்று கணக்குக் காட்டி, பணி நிலைப்பு வழங்க மறுத்து வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் என்னை சந்தித்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து முறையிட்டனர். அப்போதே அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும்அதை துணைவேந்தர் சுரப்பா ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒருவர் தற்காலிக ஆசிரியராக இருக்கிறார்; குறைந்த ஊதியம் பெறுகிறார் என்பதற்காகவே அவரின் திறமைகளை குறைத்து மதிப்பிடுவது நியாயமல்ல. அண்ணா பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர்களின் திறமையை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது; அனைத்து காலியிடங்களையும் நிரப்பவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதற்காக புதிய பேராசிரியர்களை நியமிக்கும் போது, தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு முன்னுரிமை வழங்க வேண்டும். பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் நியமனங்களிலும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; அதன்மூலம் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
No comments