Header Ads

இரும்புத் தொழிற்சாலையில் காவலர்களை கட்டிப் போட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான காப்பர் பிளேட்டுகள் , இரும்புத் தளவாடப் பொருட்கள் கொள்ளை - முகமூடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

✍ | -ராஜாமதிராஜ். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் ஹைடெக் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் வெங்கடபதி இறந்த பின்னர், அவரது மகன் ரஞ்சித் சங்கர் நிர்வாகம் செய்து வந்தார். நிர்வாக பிரச்சினை காரணமாக நஷ்டமடைந்ததால் கடந்த ஏழு ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. நிறுவனத்தின் தளவாடங்கள் அனைத்தும் மக்கி சேதமடைந்து வருகிறது. மேலும், வங்கி கடனுக்காக வங்கியின் கட்டுப்பாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளது. இந்த தொழிற்சாலை சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளதால் மரங்கள் வளர்ந்து வனம்போல் காணப்படுகிறது. மூடப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலைக்கு இரவு 11 பேர், பகல் 11 பேர் என 22 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் செக்கியுரிட்டி நிறுவன ஊழியர்கள் ஆவார்கள். இந்தநிலையில் நேற்று இரவு லாரியில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே வந்துள்ளனர். அனைவரும் முகமூடி அணிந்துள்ளனர். உள்ளே வந்த முகமூடி கும்பல் பணியில் இருந்த 11 காவலர்களை கட்டிபோட்டு தனி அறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல் தொழிற்சாலையில் உள்ள மின் சாதன பெட்டிகள், மின் மாற்றிகள், மின் கலன்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின் சாதனங்களில் உள்ள பலகோடி மதிப்பிலான காப்பர் கம்பிகளை பிளேட்டுகளை மட்டும் திருடியுள்ளனர்.

இந்த கும்பல் அலட்டி கொள்ளாமல் தொடர்ந்து சாவகாசமாக சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக பொறுமையாக திருடியதாக கூறப்படுகிறது. பின்னர் திருடப்பட்ட காப்பர் பொருட்கள் அனைத்தையும் லாரியில் எடுத்துகொண்டு ஒரு காவலரை மட்டும் கேட்டிற்கு வெளியே அடித்து பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து காலையில் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓமலூர் மற்றும் கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து வந்த போலீசார் நிறுவனத்துக்குள் சென்று அடைக்கப்பட்டிருந்த காவலர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த கம்பெனி அமைந்துள்ள இடம் கருப்பூர் காவல் நிலையத்திற்கு சொந்தமானது.

எனவே ஓமலூர் போலீசார் எங்களது பொறுப்பில்லை என சென்றுவிட்டனர். கருப்பூர் போலீசாரும் தங்களது எல்லை இல்லை என்று விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றனர். எல்லை பிரச்சினை காரணமாக இரண்டு காவல் நிலைய போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த கம்பெனியில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தும் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் எவ்வளவு என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சேலம் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தனியார் கம்பெனிக்கு சொந்தமான பொருட்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

No comments

Powered by Blogger.