Header Ads

உடல் நலன் கருதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும்! - டாக்டர் ராமதாஸ்.


ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு தற்போது சிறை விடுப்பில் வந்திருக்கும் பேரறிவாளன் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கும், ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அறிந்து கவலையடைந்தேன். இத்தகைய சூழலில் அவரது விடுதலை தாமதமாவது வேதனையளிக்கிறது.

சிறை விடுப்பில் வந்துள்ள பேரறிவாளனுக்கு விழுப்புரம் தனியார்  மருத்துவமனையில் மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்காக இம்மாதத்தின் பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்றொரு புறம் அவரது தந்தை குயில்தாசன் முதுகெலும்பு சார்ந்த குறைபாடுகளால் தொடர்ந்து மருத்துவம் பெற்று வருகிறார். மற்றவர்களின் துணை இல்லாமல் அவரால் நிற்கவோ, அமரவோ முடியாத நிலை நிலவுகிறது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை மகனை மீட்பதற்கான போராட்டத்திலேயே கழித்து விட்டார். முதுமையால் சோர்ந்து விட்ட அவருக்கும் இயல்பான பணிகளை செய்ய மற்றவர்களின் உதவியும், மன அமைதிக்கு உறவுகளின் அரவணைப்பும் தேவைப்படுகிறது.  இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அருமருந்து பேரறிவாளன் அவரது தாய், தந்தையருடன் இருப்பது தான். ஆனால், அவரது விடுதலை ஆறரை ஆண்டுகளாக தொடுவானம் போன்று விலகிக் கொண்டே செல்கிறது. இன்னும் சில நாட்களில் விடுதலை என்பது போல தோன்றினாலும், ஆண்டுகள் கடந்தும் அது சாத்தியமாகாதது அக்குடும்பத்தின் வேதனையையும், மன உளைச்சலையும் அதிகமாக்கியுள்ளது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இராபட் பயஸ், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களின் விடுதலைக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இன உணர்வு கொண்ட பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன. 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை 2014&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், அப்போதைய மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டையால் அது தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து பேரறிவாளன் தனிப்பட்ட முறையில் நடத்திய சட்டப்போராட்டத்தின்  பயனாகத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி பேரறிவாளனை விடுதலை செய்யத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இது மற்றவர்களுக்கும் பொருந்தும் என்பதால் 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தமக்கு விடுதலை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்  பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் தான் விடுதலையை விரைவுபடுத்த நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

பேரறிவாளனின் குடும்பத்தில் இன்று நிலவும் சூழலில் அவரது இருப்பு தவிர்க்க முடியாத தேவையாகி  உள்ளது. அவர் நிரந்தரமாக விடுதலை ஆனால் மட்டும் தான் இது சாத்தியமாகும். ‘‘ராஜிவ் கொலையில்  பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை. பேரறிவாளனின் வாக்குமூலத்தை நான் திரித்து பதிவு செய்ததால் தான் அவர் தண்டிக்கப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்’’ என்று ராஜிவ் கொலை வழக்கின் புலனாய்வு அதிகாரியும், சி.பி.ஐ. கண்காணிப்பாளருமான தியாகராஜன் கூறியுள்ளார்.  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் தியாகராஜன் விரிவான மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவரான கே.டி.தாமஸ் அவர்கள்,  ராஜிவ்காந்தி கொலை வழக்கின் புலன்விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தடா சட்டத்தின் அடிப்படையில் பேரறிவாளனிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் அவரை தண்டிப்பது தவறு என்று தாம் வாதிட்டதாகவும், மற்ற இரு நீதிபதிகளின் கருத்து பெரும்பான்மையாக இருந்ததால் அதற்கு உடன்பட வேண்டியதாகிவிட்டதாகவும் நீதியரசர் கே.டி.தாமஸ் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இது குறித்து சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி இவ்வழக்கின் எதிரிகள் பட்டியலில் 18&ஆவதாக பேரறிவாளனின் பெயர் உள்ளது.

பேரறிவாளன் விடுதலை குறித்த முடிவுக்காக, வேறு எந்த காரணிகளுக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை என்பதற்கு இவையே போதுமானவையாகும். மேலும், ‘‘உங்கள் மகனை விடுதலை செய்து உங்களிடம் ஒப்படைப்பேன். கலங்காதீர்கள்’’ என்று பேரறிவாளனின் தாயாரிடம் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே, பேரறிவாளன் ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட நிலையில், அவரின்  உடல்நிலை மற்றும் குடும்பச் சூழல் கருதி ஆளுனரின் ஒப்புதல் பெற்று விடுதலை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மற்ற 6 தமிழர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.