கமலா ஹாரிஸ் வெற்றியை மன்னார்குடி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதன் பின்னர் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் பல்வேறு மாகாணங்களில் இழுபறி நீடித்து வந்தது. பென்சில்வேனியா, நிவேடா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஜோ பைடன் 290 இடங்களை கைப்பற்றி அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே நேரம் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக, ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கமலா ஹாரிஸ் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலாஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் துளசேந்திரபுரம் கிராமம் முழுவதும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடி அருகே அவரது குல தெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையை ரொம்பவே விரும்புபவர் கமலா ஹாரீஸ். சென்னை வரும்போதெல்லாம் தாத்தாவோடு சென்னை கடற்கரையில் உலாவியதையும் தமிழ்நாட்டு இட்லியைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ், தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
No comments