தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 65 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 1,800 வாக்குச் சாவடிகள் ஜாதி, மத ரீதியில் பதற்றமானவை என தேர்தல் கமிஷனால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், பதற்றம் நிறைந்த 65 சட்டப்பேரவைத் தொகுதிகள் காவல் துறையினரின் தீவிர கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் 2021- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, தேர்தல் கமிஷன், ஏற்கனவே ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில், 65 சட்டசபை தொகுதிகளில் சுமார் 1,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் மதம் மற்றும் ஜாதி ரீதியாக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ளும் முன்னர், ரவுடிகள் மற்றும் பிரச்சனைக்குரிய நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் தமிழக காவல் துறையினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் மற்றும் பிரச்சனைக்குரிய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிய வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, தமிழகத்தில், 65 ஆயிரத்து, 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments