கரோனாவால் குழந்தைகளின் மனநிலை – பெற்றோர்கள் அதிர்ச்சி
✍ | -மகிழ்மதி
கரோனா ஊரடங்கால் பெரியவர்களே பெரும் மனப்போராட்டத்தைச் சந்தித்து வரும் சூழலில் குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொள்வது பெற்றோருக்குச் சவால் நிறைந்ததாக இருக்கிறது. காற்றுக்குக் கடிவாளம் போடுவதைப் போன்றதுதான் சுற்றித் திரிந்த குழந்தைகளை வீட்டுக்குள் வைத்துப் பராமரிப்பது.
ஊரடங்கின் தொடக்க நாட்களைப் பெரும்பாலான குழந்தைகள் மகிழ்ச்சியாகவே கழித்தனர். கற்பனைக்கு எட்டாத அற்புத உலகமாகவே இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் தங்க வைக்கப்படும்போது அலுத்துவிடும்தானே. மூன்று மாதங்களைக் கடந்து தொடரும் ஊரடங்கு அப்படியான அலுப்பையும் சோர்வையும்தான் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை… இரண்டரை மாதங்களாக வீடுகளில் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கும் செல்ல முடியது, நண்பர்களுடன் விளையாட முடியாது. பூங்காவிற்கோ, வெளியிலோ செல்லமுடியாது. இதுபோன்ற கட்டுப்பாடுகள், குழந்தைகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
லாக்டவுன் காரணமாக, பல குழந்தைகளின் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறியுள்ளது… காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்லும் வழக்கம் மாறிவிட்டது. இரவு தாமதமாக தூங்குவது, காலையில் நேரம் சென்று கண் விழிப்பது, உணவு உண்ணும் நேரம் மாறியது, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உடல் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது என இப்போது அவர்களின் அன்றாட நடைமுறை மாறிவிட்டது. பள்ளிக்கு செல்வதும், தங்கள் அக்கம்பத்தில் உள்ள நண்பர்களுடனான தொடர்பும் குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்கும்.... ஆனால் லாக்டவுன், அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது
கரோனா வைரஸ் பரவல் குறித்தும் நாம் வீட்டுக்குள்ளேயே இருப்பதன் அவசியம் குறித்தும் குழந்தைகளுக்குப் புரிந்தாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருப்பது என்பதுதான் அவர்களின் எரிச்சலுக்குக் காரணம். எரிச்சல் கோபமாகி, சில நேரம் எல்லை கடந்துவிடுவதும் உண்டு. இதுபோன்ற சூழலில் பெற்றோரும் குழந்தைகளுக்கு நிகராகக் கோபப்படுவதோ அவர்களை அடக்க முயல்வதோ எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்தும்.
குழந்தைகளைக் கையாளும் வழி தெரியாதபோதுதான் கோபம் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றினால் குழந்தைகளின் மனநிலையில் விரும்பத்தகுந்த மாற்றத்தைக் காணலாம் என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.
குழந்தைகள் சொல்லும் எல்லாவற்றையும் கவனமாகக் கேளுங்கள்… அவ்வப்போது அவர்களுடன் பேசிக் கொண்டே இருங்கள், அவர்களுடைய எல்லா கேள்விகளுக்கும் அன்புடனும் பொறுமையுடனும் பதிலளிக்கவும்.முடிந்தால், அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள், வீட்டில் விளையாடக்கூடிய விளையாட்டுகளை விளையாடுங்கள்… பெற்றோர்கள் அல்லது வீட்டின் உறுப்பினருடன் எப்போதுமே குழந்தை இருப்பதை உறுதி செய்யுங்கள்.
செல்போனிலோ டிவியிலோ அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும். தேவையற்ற வீடியோக்களைப் பார்ப்பது, விளையாடுவது போன்றவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தால் செல்போனைத் தர முடியாது என்பதைக் கண்டிப்புடன் சொல்ல வேண்டும். மாறாகப் படிப்பது, அறிவுப்பூர்வமான தகவல்களைத் தேடுவது எனப் பயனுள்ள வகையில் செல்போனைப் பயன்படுத்தினால் கண்டிக்கத் தேவையில்லை. பயன்படுத்தும் நேரத்தை மட்டும் கட்டுக்குள் வைத்தால் போதும்” என்கிறார்.
ஊரடங்கில் மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் நாம் பிள்ளைகளுக்கு முன்னால் நடந்துசெல்வதைவிட, அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு இணையாக நடப்பதுதான் சரியான வளர்ப்புமுறை.
No comments