கொரொனா பற்றிய மருத்துவரின் கேள்வி - பதில்கள்: நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வேளையில், நம் உடல் வெளிக்காட்டும் அறிகுறிகள் என்னென்ன...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
கொரொனா தொற்று நோய் பெரும்பாலும் இலேசான மற்றும் மிதமாக தாக்குதல் நடத்தியும் மீதி 15% - 20% நபர்களுக்கு தீவிர தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வேறுபாடு ஏன்? எப்படி நிகழ்கிறது?
பொதுவாக நமது உடல் எதிர்ப்பாற்றல் (immunity) நம்மை தாக்கும் நச்சுயிரி கிருமிகளிடம்(infection) சண்டையிட்டு அழற்சியை (inflammation) ஏற்படுத்தி தொற்றால் உண்டாகும் நோயை கட்டுப்படுத்தி நம்மை காப்பாற்றும். இதனால் பெரும்பாலான நேரங்களில் நோய் தானாகவே கட்டுக்குள்(self limiting) வந்து விடுகின்றன. சில நேரங்களில் இந்த சண்டை போர் சூழலை ஏற்படுத்தி பெரும் சேதத்தை உருவாக்கி நோயுறும் தன்மை(morbidity) மற்றும் இறப்புகள்(mortality) ஏற்படுத்தும். ஆக நமக்கும் வைரசுக்கும் நடக்கும் போராட்டம் சாதாரண சலசலப்பாகவும் இருக்கலாம் இல்லை பெரிய யுத்தமாகவும் முடியலாம். இவற்றை தீர்மானிப்பது வைரசு கிருமியின் வீரியம் (virulence), கிருமிகளின் எண்ணிக்கை (viral load), நமது உடலின் எதிர்ப்பாற்றல்(immunity) மற்றும் நமது மரபணு(gene) போன்றவையாகும்.
கிருமி அதிக வீரியமாகவோ, கிருமிகள் அதிக எண்ணிக்கையிலோ நம்மை தாக்கும் போதும் நமது எதிர்ப்பு சக்தி சீராக இல்லை என்றாலோ இல்லை மரபணு பீடிக்கப்பட்டாலோ(genetic susceptibility) நோயின் தன்மை தீவிரமாக காணப்படும்.
கொரொனா கிருமி தன் மேல் உறையில் இருக்கும் (S protein) சாவியை கொண்டு நமது உடல் உறுப்புகளின் உயிரணுக்களில் இருக்கும் பூட்டினை(ACE2 receptors) திறந்து திசுக்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். அதிக எண்ணிக்கையில் கிருமி உடலுக்குள் சென்றால் நோய் தீவிரமாக உண்டாகும். இந்த ACE2 நொதிப்பு அளவு நமது மரபணுக்கு ஏற்றவாறு ஒவ்வொருக்கும் மாறுபடும். இதன் காரணமாகவும் நோய் தாக்கம் வேறுபடுகிறது.
தீவிரமான கொரொனா தாக்குதலில் என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படுகிறது? எதனால்?
கொரொனா தொற்று பெரும்பாலும் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி தொற்று கிருமிகளை எதிர்த்து போராடும்(infective period). இதன் பொருட்டு ஏற்படும் அழற்சி நான்கைந்து நாட்கள் கழித்து படிப்படியாக அதிகரித்து(inflammatory period) அதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக ACE2 அதிகம் இருக்கும் நுரையீரல், இதயம், சிறுநீரகம், குடல், இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல், வயிற்று கோளாறு, இதயம் மற்றும் சிறுநீரக தொந்தரவு ஏற்படுத்துகிறது.
சில நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தியானது கிருமியை தீவிரமாக தாக்க முற்படும் பொழுது நம் உடலுக்கும் சேதாராம் விளைவித்து விடும் (hyperinflammation). இப்படி அதிகமான அழற்சியானது சைடோகைன்(cytokine) எனப்படும் உயிரணு செயலூக்கிகளால் ஏற்படுகிறது. கட்டுக்கடங்காமல் புயல் வேகத்தில் இந்த செயலூக்கிகள் நம் உடலை தாக்கும் பொழுது (cytokine storm) குறிப்பாக நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசம் செயல் இழக்கிறது. மேலும் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு குருதி அடைப்பும் ஏற்படலாம் (thrombosis). இதனால் உடலுக்கு கிடைக்க வேண்டிய பிராண வாயு (Oxygen) குறைந்து மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்(multi organ damage). இந்த சூழ்நிலையில் இறப்பு தவிர்க்க முடியாமல் போய் விடும்.
கொரொனா தொற்று கிருமிக்கு சரியான மருந்துகள் கிடைக்காத நிலையில் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?
கொரொனா தொற்று நச்சுயிரி கிருமியை சரியாக தாக்கும் திறன் கொண்ட மருந்துகள்(specific Anti viral agents) இன்னும் எந்த மருத்துவ முறையிலும் கிடைக்கவில்லை. அலோபதி மருத்துவத்தில் தற்போது எல்லா வித வைரசு கிருமிகளை பொத்தாம் பொதுவாக அழிக்கும் மருந்துகள் (Broad spectrum Anti virals) தான் இருக்கிறது. இவை ஓரளவுக்கு தான் கொரொனா நோயை கட்டுப்படுத்தும். இதன் காரணமாக தான் பெரும்பாலும் உடல் பக்க பலம் மற்றும் எதிர்ப்பு சக்திக்கு துணை தரும் மருத்துவ சிகிச்சை முறையை கையாண்டு நோயாளிகள் குணப்படுத்தப்படுகிறார்கள். அதாவது தேவையான நீர்ச்சத்து, ஊட்டச்சத்து மருந்துகள் சித்த, ஆயுர்வேத, அலோபதி, ஓமியோபதி மருத்துவம் மூலம் கொடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் முன்பு சொன்னது போல மிதமான தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு (ஒன்றாம் பிரிவினர்) உதவும்.
கூடுதல் நுண்ணுயிரிகள் (secondary bacterial infection) தோன்றினால் நுண்ணுயிர்ப்பகை மருந்துகள் (antibiotics) ஆரம்பிக்க நேரிடும்.
நோயின் தீவிரம் அதிகமாகி( 2 மற்றும் 3 ம் பிரிவினர்) உடலில் பிராண வாயு தெவிட்டு நிலை(Oxygen Saturation) குறைந்தால், ஆக்சிஜன் கொடுக்கப்படும். அடுத்து அதிகமான அழற்சி ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த சிடிராயிடு(Dexa, Prednisolone) மருந்துகள் பயன்படும். அதிக அழற்சியால் செயலூக்கிகள் புயல் காரணமாக (cytokine storm) பெரும் பாதிப்பு ஏற்படும் பொழுது ஓரிணை நோய் எதிர்ப்புகள் (monoclonal antibodies) மற்றும் கொரொனா நோய் குணமாகியவர்களிடம் எடுக்கப்பட்ட இரத்த கணிகச்சாறு (plasma therapy)செலுத்தி சிகிச்சை கொடுக்கப்படும். இரத்த நாளங்கள் அடைப்பு ஏற்பட்டால் உறைவு எதிர்ப்புகளை (Anti coagulants) கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூச்சு திணறல் மற்றும் சுவாசம் செயல் இழந்த நிலையில் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?
பிராண வாயு நம் உடலில் குறையும் போது அதன் அளவினை ஆக்சிமீட்டர் சாதனத்தில் 94 % க்கு கீழ் வந்தால் உடனடியாக நாசி வழியாக ஆக்சிஜன் கொடுக்க வேண்டும். அப்படி செய்தும் பிராண வாயு தொடர்ந்து குறைந்து 80% சென்றால் செயற்கை சுவாச கருவிகள் (ventilators) மூலம் ஆக்சிஜன் செலுத்தி நோயாளிகளை காப்பாற்ற முயற்சிக்கப்படும்.
கொரொனா நோயிலிருந்து மீண்டு குணமாகியவர்களுக்கு பின்விளைவுகள் எதாவது ஏற்படுமா? நாம் செய்ய வேண்டியது என்னென்ன?
கொரொனா தொற்று நோய் பாதிக்கப்பட்டு குணமாகிய பிறகு மீண்டும் கொரொனா நோய் தாக்குமா என்பது தான் மிக பெரிய கேள்வி. தற்போது உலகம் முழுவதும் தாக்கி வரும் கொரொனா தொற்று நோய் ஒரு புது விதமான நச்சுயிரி கிருமியால் ஏற்படுகிறது. இதன் வரலாறு என்பது வெறும் பத்தே மாதங்கள் தான். இதுவரை உலகில் அது போன்று யாருக்கும் மீண்டும் மீண்டும் கொரொனா தாக்கியதாக உறுதி செய்ய வில்லை. ஒருவருக்கு கொரொனா நோய் ஏற்பட்ட பிறகு அவரது உடல் அந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை பெற்று விடும். அது எவ்வளவு நாள் நம்மை பாதுகாக்கும் என்பது போக போக தான் தெரியும். ஒரு வேளை இந்த கொரொனா தொற்று கிருமி தன்னை மாற்றி வடிவமைத்து/திரிபு கொண்டால் (mutation/another strain) மீண்டும் தாக்கும் சூழல் ஏற்படலாம். பொறுத்து தான் விடை தெரிய வரும். அதனால் முன்பு சொன்னது போல சமூக இடைவெளி, முகக் கவசம், கை சுத்தம் எப்போதும் கடை பிடிக்க வேண்டும்.
கொரொனா நோய் வந்து சென்றவர்களுக்கு எதேனும் தொந்தரவு வருகிறதா?
இலேசான மற்றும் மிதமான தாக்குதல் அடைந்தவர்களுக்கு உடல் சோர்வு மட்டும் சில நாட்களுக்கு இருக்கிறது. தேவையான ஒய்வு எடுத்தாலே போதுமானது. முன்பு சொன்னது போல நீர்ச்சத்து, ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் எடுத்துக் கொள்வது அவசியம். சிலருக்கு தொடர் இருமல், பதற்றம், தூக்கமின்மை, கை கால் வலி, மன சோர்வு ஏற்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிதாக பயப்பட வேண்டாம்.
(Dr. A. Ramalingam MD.,)
தீவிர தாக்குதல் அடைந்தவர்களுக்கு உடல் சோர்வு சில வாரங்கள் வரை நீடிக்கிறது. மேலும் இவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் நுரையீரலில் தழும்பு (fibrosis) ஏற்பட்டு மூச்சு விட சிரமம் ஏற்படலாம். சிலருக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மருத்துவர்களின் அறிவுரைபடி அதற்கான மருந்துகள் மற்றும் பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தொடரும்...
No comments