Header Ads

உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.


 ✍️ | ராஜாமதிராஜ்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.கொணலவாடி கிராமம். சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழும் இந்த கிராமத்தில் கிராம ஊராட்சியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த கிராமத்தில் கிராம ஊராட்சியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. 

இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் அருகில் உள்ள வயல் வெளி பகுதிகளுக்குச் சென்று விவசாய மின் மோட்டார்கள் இருந்து வரும் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே கிராம ஊராட்சியின் மூலம் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உளுந்தூர்பேட்டை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளோடு பேசி இந்த கிராமத்திற்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

No comments

Powered by Blogger.