Header Ads

துரைமுருகன் என்றால் கனிவு! டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு! - ஒன்றிணைந்து கழகப் பணி ஆற்றுவோம்! வெற்றி பெறுவோம்!! வெற்றி நமதே!!!

 

 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.


துரைமுருகன் என்றால் கனிவு! டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு! இந்தக் கனிவும் கண்டிப்பும் கழக வளர்ச்சிக்குப் பயன்படட்டும்!

ஒன்றிணைந்து கழகப் பணி ஆற்றுவோம்! வெற்றி பெறுவோம்!! வெற்றி நமதே!!!  - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.


திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டம், இன்று (9.9.2020) சென்னை - அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இடைவிடாது 5 மணி நேரம் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் நிறைவாக, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. துரைமுருகன் அவர்களையும் - பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களையும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட முனைவர் க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோரையும் வாழ்த்தி உணர்ச்சி மிகு உரையாற்றினார்.

பொதுக்குழுவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாக இருக்கக் கூடிய பொதுக்குழு உறுப்பினர்களால், கழகத்தின் அதிகாரம் மிகுந்த பொதுச்செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, என்னுடைய அன்புச் சகோதரர் - அண்ணன் துரைமுருகன் அவர்களே! கழகத்தின் அதிகாரம் மிகுந்த பொருளாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - என்னுடைய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே!

தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களே! துணைப் பொதுச் செயலாளர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அவர்களே! சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே! அந்தியூர் செல்வராஜ் அவர்களே! - இன்று துணைப் பொதுச்செயலாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள முனைவர் பொன்முடி அவர்களே! சகோதரர் ஆ.ராசா அவர்களே! -  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே! செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே! மகளிர் அணியின் செயலாளர் – நாடாளுமன்றக் கழகக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி அவர்களே! இளைஞரணியின் செயலாளர் உதயநிதி அவர்களே! உடல்நலிவுற்ற நேரத்திலும், நான் வாழ்த்த வருகைத் தருகிறேன் என மனமுவந்து என்னிடம் தொலைபேசியில் தெரிவித்துவிட்டு, இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த அரங்கத்து வந்தமர்ந்து புதிதாக தேர்வுசெய்யப்பட்டிருப்பவர்களை வாழ்த்தி விடைபெற்றிருக்கும் ஆர்க்காட்டார் அவர்களே! தலைமைக் கழக நிர்வாகிகளே! மாவட்டக் கழகச் செயலாளர்களே! பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களே – செயலாளர்களே - நிர்வாகிகளே! பொதுக்குழு உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

புதிய பொதுச் செயலாளரையும் பொருளாளரையும் தேர்ந்தெடுக்கக் கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பொதுக்குழுவை பிரமாண்டமாக ஒரு மாநாடு போல் இந்த அரங்கில் நடத்துவதற்குப் பதிலாக; நாம் அனைவரும் ஒரே இடத்தில், கூட இயலாத சூழ்நிலையைக் கொரோனா ஏற்படுத்தி விட்டது.

3500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலை எந்த மாதத்தில் ஏற்படுமோ என்பது தெரியாத நிலையில், காணொலிக் காட்சி மூலமாக பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். மார்ச் 29-ம் தேதியன்று இந்தப் பொதுக்குழு கூடியிருக்க வேண்டும்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஐந்து மாதங்கள் கழித்து இந்தப் பொதுக்குழு கூடுகிறது. ஊரடங்கு என்பதை ஒருவார காலம் கழித்து அறிவித்து இருந்தால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் மார்ச் மாதமே பொதுச்செயலாளராகவும், அண்ணன் பாலு அவர்கள் பொருளாளராகவும் ஆகி இருப்பார்கள்.

இந்த ஊரடங்கு சூழ்நிலையை உணராத ஊடகங்கள்; உணர்ந்தாலும் - அதை மறைத்துவிட்டு, ஏராளமான கற்பனைக் கதைகளை இந்த ஐந்து மாத காலம் எழுதிக் கொண்டு இருந்தார்கள்.

தி.மு.க.,வின் பொதுக்குழுவில் இடம்பெறாத அந்த உறுப்பினர்கள், தி.மு.க. மீது எவ்வளவு அக்கறையாக, ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து உண்மையில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளருக்குப் போட்டி - பொருளாளர் பதவிக்குப் போட்டி - என்று செய்திகளை வெளியிட்டு, அவர்கள் தங்களைத் தாங்களே சொறிந்து கொண்டார்கள்.

பொதுவாக ஊடகங்கள்; யார் ஆளும்கட்சியோ அவர்களைத்தான் அதிகமாக எழுதுவார்கள், விமர்சிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டு ஊடகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாருக்காவது தும்மல் வந்தால் - இருமல் வந்தால் - அதனைப் பூதாகாரமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், உண்மையில் தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று தமிழ்நாட்டு ஊடகங்கள் நினைக்கின்றன.

அவர்கள் ஆசை இன்னும் எட்டு மாதத்தில் நிறைவேறிவிடும் என்பதை இந்தப் பொதுக்குழுவின் வாயிலாகச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்!

என்றும் இல்லாத அளவுக்கு இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராக அண்ணன் துரைமுருகன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொருளாளராக அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

பொதுக்குழு உறுப்பினர்களான 3500 பேரால் மட்டுமல்ல; இலட்சக்கணக்கான தொண்டர்களின் மூலமாக, புதிய பொதுச்செயலாளரும் - புதிய பொருளாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

அண்ணன் துரைமுருகன் அவர்களாக இருந்தாலும், அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் பொறுப்பு வேண்டுமானால் புதியதாக இருக்கலாம்; ஆனால் கழகத்துக்கு - எங்களுக்கு நீங்கள் இருவரும் புதியவர்கள் அல்ல; நெடுங்காலம் பழகிய முகங்கள். எங்களில் இருவர்தான் நீங்கள்!

உங்கள் இருவரையும் இளைஞர்களாக நான் முதலில் பார்த்தேன். இன்றைக்குப் பொதுச் செயலாளராகவும் பொருளாளராகவும் பார்க்கிறேன். அதுவும் தலைவராக இருந்து பார்க்கிறேன்.

உங்களைப் பார்க்கும் போது, எனக்கு, உங்கள் முகம் தெரியவில்லை. நம்மை எல்லாம் ஆளாக்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் தெரிகிறார்! அவரில்லாமல் நாம் மூன்று பேரும் இல்லை! ஏன், யாருமே இல்லை!

நம்மை இந்தப் பொறுப்புகளில் அமர வைத்துவிட்டு, வங்கக் கடலோரம் ஓய்வு கொண்டிருக்கிறார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்த இயக்கத்துக்கு அண்ணன் துரைமுருகன் பொதுச்செயலாளர் - இந்த இயக்கத்துக்கு அண்ணன் டி.ஆர்.பாலு பொருளாளர் - என்பதை விட, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய வேறு ஒரு செய்தி இருக்க முடியாது!

அண்ணன் துரைமுருகன் அவர்களாக இருந்தாலும், அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களாக இருந்தாலும் - திடீரென்று இந்த உயரத்தை எட்டிவிடவில்லை.

நான் எப்படி படிப்படியாக வளர்ந்து வந்தேனோ - அதைப் போலவே அவர்களும் படிப்படியாக வளர்ந்து இந்த உயரத்தை எட்டி இருக்கிறார்கள்.

அண்ணன் துரைமுருகன் அவர்கள் பிறந்த கே.வி.குப்பம் ஊருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வருகிறார்கள்; அப்போது ஒரு வீட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தங்கியிருக்கிறார். அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பேரறிஞர் அண்ணா அவர்களை அண்ணன் துரைமுருகன் அவர்கள் எட்டிப் பார்த்திருக்கிறார்.

அன்று, பேரறிஞர் அண்ணா அவர்களை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த துரைமுருகன் அவர்கள் தான் - இன்றைய தினம் பேரறிஞர் அண்ணா அவர்கள் வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறார்.

அதேபோல் நாவலர் அவர்களது உரையை, ஒரு ஊரில் கேட்டபிறகுதான், தனக்கு கழக ஈடுபாடு அதிகமாக ஏற்பட்டதாக அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள். அப்படிப்பட்ட அண்ணன் துரைமுருகன் அவர்கள்தான், இன்றைக்கு நாவலர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை அடைந்திருக்கிறார்.

பேராசிரியர் அவர்களின் பேச்சு எனக்கு அதிகம் பிடிக்கும் என்று அண்ணன் துரைமுருகன் சொல்லி இருக்கிறார். அத்தகைய பேராசிரியர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை இன்றைக்கு அண்ணன் துரைமுருகன் அவர்கள் அடைந்திருக்கிறார். அண்ணன் துரைமுருகன் அடைந்திருக்கிறார் என்றால் - அந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்!

இதில் எனக்கு என்ன பெருமை என்றால் - நான் தலைவராக இருக்கும் போது, அவர் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார் என்பது, தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பெருமை!

(கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துப பெறுகிறார், இளைஞரணிச் செயலாளர் !)

இன்னும் சொன்னால்; அண்ணன் துரைமுருகன் அவர்கள் இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை என்னுடைய தாயார் தயாளு அம்மையார் அவர்கள் அறிந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

1970-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் துரைமுருகன் அவர்களை முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட தலைவர் கலைஞர் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அண்ணன் துரைமுருகன் மறுத்தார்.

“நான் வழக்கறிஞராகப் பிராக்டீஸ் பண்ணப் போகிறேன்” என்று சொல்லி இருக்கிறார். அப்போது அருகில் இருந்த தயாளு அம்மாதான், “ஏன் வேண்டாம்ன்ற? தேர்தலில் நில்லு” என்று சொல்லி இருக்கிறார்கள்.

“என்னிடம் பணமெல்லாம் இல்லைம்மா” என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொன்னபோது, “அதெல்லாம் கட்சியில கொடுப்பாங்க” என்று சொன்னதும் தயாளு அம்மாதான்.

அந்த நம்பிக்கையில் முதன்முதலாக காட்பாடி தொகுதியில் அண்ணன் போட்டியிட்டார்கள்.

கட்சி நிதியாக 10 ஆயிரம், தலைவர் கலைஞரின் நிதியாக 10 ஆயிரம், தயாளு அம்மாள் 10 ஆயிரம் என வந்த நிதியை வைத்துத்தான் முதல் தேர்தலில் தேர்தல் பணியை ஆற்றினார்.

அன்றைய தினம், நானும் காட்பாடி தொகுதிக்கு வந்து தேர்தல் பிரச்சார நாடகம் போட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதனால்தான், அண்ணன் துரைமுருகன் அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளராக ஆகிடும் செய்தி, தயாளு அம்மா அவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொன்னேன்.

ஒருமுறையல்ல; 7 முறை காட்பாடி தொகுதியிலும் - ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறையும் வென்றார். 9 முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் ‘சட்டமன்ற ஸ்டாராக’ – ‘சூப்பர் ஸ்டாராக’ச் செயல்படும், அண்ணன் அவர்களைப் போன்ற மற்றுமொரு சீனியர் நம் கட்சியிலும் இல்லை; வேறு கட்சிகளிலும் இல்லை! தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இல்லை!

அத்தகைய பெருமைக்குரிய ஒருவரை திராவிட முன்னேற்றக் கழகம், பொதுச் செயலாளராகப் பெற்றுள்ளது.

காட்பாடி மாவட்டப் பிரதிநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர், தணிக்கைக் குழு உறுப்பினர், மாநில மாணவரணிச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், கழகத் துணைப் பொதுச் செயலாளர், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், பொருளாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர், பொதுப் பணித்துறை அமைச்சர் - என, பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்!

இந்த மகுடங்கள் வரிசையில் இன்றைய தினம் “கழகப் பொதுச் செயலாளர்” பொறுப்பையும் அடைந்துள்ளார்.

சட்டமன்றத்தில் ‘இடி - மின்னல் - மழை’ என்று கலக்கியவர்களில், அண்ணன் துரைமுருகன் அவர்கள் மின்னல் என்று அழைக்கப்பட்டார்கள். மின்னல் வான மண்டலத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் ஒளிவீச்சுதான்.

அந்த வகையில் பார்த்தால் அண்ணன் துரைமுருகன் அவர்கள், ஐம்பது ஆண்டுகளாக கழகத்துக்குள் ஒளிபாய்ச்சிக் கொண்டு இருப்பவர். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். தானும் மகிழ்ச்சி அடைந்து, மற்றவர்களையும் மகிழ்விப்பவரே அனைவராலும் மதிக்கப்படுவார். அந்த வகையில் அனைவரது விருப்பத்துக்கும் உரியவராக அண்ணன் துரைமுருகன் அவர்கள் இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் எனக்கு எல்லா வகையிலும் வழிகாட்டியாக இருக்கிறார். அத்தகைய ஆருயிர்ச் சகோதரர் துரைமுருகன் அவர்களே! உங்களை வாழ்த்துகிறேன்! போற்றுகிறேன்! பாராட்டுகிறேன்!
(பொருளாளர் டி ஆர் பாலு அவர்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெறுகிறார், இளைஞரணிச் செயலாளர் !)

அதைப் போலவே அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும், கழகத்துக்குக் கிடைத்த ஆற்றல் மிக்க போர்வீரர்! மூவேந்தர்கள் ஆண்ட நாட்டை - ஒரு வேந்தர் ஆண்டால் எப்படி இருக்குமோ - அப்படி இன்றைக்கு நான்கு மாவட்ட மாவட்டமாக இருக்கும் சென்னையை, அன்று ஒற்றை மனிதராகக் கட்டி ஆண்டவர் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள்.

 இளம் வயதில் கழகப் பணியில் இறங்கியவர் அண்ணன் பாலு அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1957-ம் ஆண்டு 17 வயதில் இணைந்தவர், இன்றைக்குப் பொருளாளராக வளர்ந்து வந்துள்ளார்.

  பகுதி பிரதிநிதி -  மாவட்டப் பிரதிநிதி - பொதுக்குழு உறுப்பினர் - என வளர்ந்து  1974-ல் மாவட்ட துணைச் செயலாளர் ஆனார். ‘மிசா’ நெருக்கடி காலத்தில் தலைவர் அவர்களுக்கு ஓட்டுநராக கூடவே இருந்தவர்.  மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

1982-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக ஆனார். தலைமைக் கழகத்தால் தலைநகர் சென்னையில் அறிவிக்கப்பட்ட மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் அனைத்தையும் திறம்பட நடத்தி, தலைநகர் சென்னையில் தி.மு.க.,வை தலைநிமிர வைத்தவர் அண்ணன் பாலு அவர்கள். கழகத்தை அனைவரும் அண்ணாந்து பார்க்கக் காரணமாக இருந்தவர் அண்ணன் பாலு அவர்கள்.

 “வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் பாலுவும் ஒருவர்” என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர். 1988-ம் ஆண்டு, ‘தேசிய முன்னணி’ சென்னையில் தொடங்கப்பட்டபோது நடந்த மிகப்பிரமாண்டமான ஊர்வலம், பொதுக்கூட்டம்; அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

அந்த ஊர்வலத்தில், வெள்ளுடை அணிந்து அணிவகுத்த இளைஞர் அணி வீரர்களுக்கு நான் தலைமை வகித்து வந்தேன்.

சுமார் 16 மணிநேரத்துக்கும் மேல் அந்தப் பேரணியில் கழகத் தொண்டர்கள் அணிவகுத்து வந்தார்கள். இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள். அத்தகைய தேசிய முன்னணித் தொடக்கவிழாவை நடத்திக் காட்டியவர் அண்ணன் பாலு அவர்கள்.

இவை அனைத்தையும் விட இருபத்தி நான்கு மணிநேரமும் ‘கலைஞர் - கலைஞர்’ என்ற சிந்தனையோடு இருப்பவர் அண்ணன் பாலு அவர்கள்.

ஜெயலலிதா அரசாங்கத்தால் தலைவர் கலைஞர் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது, அவரை எங்கே கொண்டு செல்கிறார்கள், எதற்காகக் கைது செய்துள்ளார்கள் என்று தெரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டு இருந்தார்கள்.

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்குள் தலைவரைக் கொண்டு போய் வைத்து தனிமையாக, யாரும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக பூட்டி வைத்திருந்தபோது, ‘ஓப்பன் த டோர்' என்று உரத்த குரலெழுப்பி, அந்தக் கதவை உடைக்கப் பாய்ந்தவர் அண்ணன் பாலு அவர்கள். அப்போது அவர் மத்திய அமைச்சர். அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை.

தலைவர் கலைஞருக்கு ஒன்று என்றால், உயிரையும் கொடுக்கக் கூடியவராக இருக்கக் கூடியவர் பாலு அவர்கள்.

அவர் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆனபோது, தினமும் காலையில் அண்ணா அறிவாலயம் வந்துவிடுவார். மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.

கழகத்தின் நிர்வாகிகள் கூடி இருக்கும் கூட்டத்திலேயே நான் சொன்னேன், “எல்லோரும் அண்ணன் பாலுவைப் போல பணியாற்ற வேண்டும்” என்று சொன்னேன்.

1986-ல் மாநிலங்களவை உறுப்பினர் - 1996-ல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் - 1998-ல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் - 1999-ல்  தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் - 2004-ல்  தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் - 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் -  2019-ல்  ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.

மூன்று முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

1986 முதல் 1992 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

1996 - 1998 வரை பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

1999 - 2003 வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2004 - 2009 வரை, கப்பல்துறை மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப பதவி வகித்தார்.

இப்படிப் பல்வேறு பொறுப்புகளை - கழகத்திலும் மத்திய அரசிலும் வகித்தவர் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள்.

அவர் இன்றைக்குக் கழகப் பொருளாளராக உயர்ந்துள்ளார்.

அண்ணன் துரைமுருகன் அவர்கள் 9 முறை சட்டமன்ற உறுப்பினர். அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் 6 முறை மக்களவையிலும் ஒரு முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். அண்ணன் துரைமுருகன் அவர்கள் 3 முறை மாநில அரசில் அமைச்சர். அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் மூன்று முறை மத்திய அமைச்சர். இருவருமே ஓராண்டு காலம் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர்கள். இத்தகையவர்களுக்கு மேலும் மகுடமாக இந்தப் பொறுப்புகள் கிடைத்துள்ளன.

அண்ணன் துரைமுருகன் அவர்களே!

நீங்கள் இனி வகிக்கப் போகும் பொதுச்செயலாளர் பொறுப்பு என்பது, பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்த பொறுப்பு ! நாவலர் அவர்கள் இருந்த பொறுப்பு! பேராசிரியர் அவர்கள் இருந்த பொறுப்பு ! இந்தச் சிறப்பு மிகு வரலாற்றுக் கடமை உங்கள் தோள் மீது விழுந்துள்ளது!

அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களே !

நீங்கள் இனி வகிக்கப் போகும் பொருளாளர் பொறுப்பு என்பது, தலைவர் கலைஞர் அவர்கள் இருந்த பொறுப்பு ! எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்த பொறுப்பு ! பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அவர்கள் இருந்த பொறுப்பு ! சாதிக் அவர்கள் இருந்த பொறுப்பு ! நான் இருந்த பொறுப்பு!

இந்தச் சிறப்புமிகு வரலாற்றுக் கடமை உங்கள் தோள் மீது விழுந்துள்ளது!

இந்தப் பொறுப்புகள் வேண்டுமானால் உங்களுக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கழகம், இந்த பொதுக்குழு உறுப்பினர்கள், இலட்சக்கணக்கான தொண்டர்கள், அந்தத் தொண்டர்களின் தலைமைத் தொண்டனான நான் - ஆகியோர் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டும் என்பது இல்லை.

எல்லாம் அறிந்தவர்கள் நீங்கள். ஏராளமான திறமை உள்ளவர்கள் நீங்கள். உங்கள் மொத்த திறமையையும் கழகத்துக்குத் தாருங்கள், கழக வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்கள் என்று இலட்சக்கணக்கான தொண்டர்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

துரைமுருகன் என்றால் கனிவு. டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு.

இந்தக் கனிவும் கண்டிப்பும் கழக வளர்ச்சிக்குப் பயன்படட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதன்மைச் செயலாளராக இருக்கும் அண்ணன் நேரு அவர்கள் பொறுப்பேற்று கூடுகின்ற முதல் பொதுக்குழு என்பதால் அவரையும் நாம் பாராட்ட வேண்டும். தீரர்களின் கோட்டமாம் திருச்சி தந்திருக்கும் ஆற்றல்மிக்க செயல்வீரர்களில் ஒருவர் நம்முடைய நேரு அவர்கள். அவர் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்று அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக எந்நாளும் உழைக்கக்கூடிய ஆற்றல்மிக்க செயல்வீரர் அந்தியூர் செல்வராஜ் அவர்கள். அவர் துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, அந்தப் பணியைச் சிறப்பாக ஆற்ற உறுதியேற்றிருக்கிறார்.

அவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல், தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி அவர்களும் ஆ.ராசா அவர்களும் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கும் இரண்டு இலட்சியவாதிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதை பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் பொன்முடி.

ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆ.ராசா.

பொன்முடி, மூன்று முறை மாநில அமைச்சராக இருந்தவர்.

ஆ.ராசா, இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்தவர்.

பொன்முடியைப் பொறுத்தவரையில், விழுப்புரம் மாவட்டக் கழகத்தோடு அவரது பணி முடிந்துவிடக்கூடாது என்பதால் தலைமைக் கழகத்துக்கு அவரை அழைத்துக் கொண்டேன்.

இன்றைக்கு தலைவர் என்ற பொறுப்பைத் தாங்கி உங்கள் முன்னால் நிற்கிறேன். ஆனால் 2003-ம் ஆண்டே விழுப்புரம் மண்டல மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் பெருமையை எனக்குத் தந்தவர் பொன்முடி அவர்கள்.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் நான் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு கலந்து கொண்ட முதல் கூட்டம் விழுப்புரத்தில் நடந்த முப்பெரும் விழா. அதனை சிறப்புற நடத்திக் காட்டியவர் பொன்முடி அவர்கள்.

அவரே பொன்முடி. அவரது முடிக்கு மேலும் ஒரு மகுடத்தைச் சூட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருமைப்படுகிறது!

அதேபோல், நம்முடைய ஆ.ராசா அவர்களுக்கு இன்றைய தினம் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சொற்களைக் கடன் வாங்கிச் சொல்கிறேன்...

என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவர் என்றும்-

பட்டிக்காட்டுப் பொட்டலில் பூத்துக்குலுங்கும் புரட்சியாளர் என்றும் -

தகத்தயா சூரியன் - என்றும் கலைஞர் அவர்களே பாராட்டுப் பட்டயம் வாசித்து அளித்த பிறகு தனியாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது.

பொன்முடியாக இருந்தாலும், ஆ.ராசாவாக இருந்தாலும், தங்களது அறிவை, உழைப்பை, திறமையை, ஆற்றலை, முழுமையாக கழகத்தின் வளர்ச்சிக்கு எழுச்சிக்கு மேம்பாட்டுக்கு பயன்படுத்திப் பாடுபடுங்கள் என்று அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுக்குழு முடிந்ததும் - செப்டம்பர் 15 அன்று முப்பெரும் விழாவை நடத்த இருக்கிறோம். 

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கிளைக்கழகப் பொறுப்பாளர்களின் தேர்தல் முடிவுகள், மாவட்ட வாரியாக முரசொலியில் வெளியாகி வருகிறது. இந்தத் தேர்தலை முடிக்காத மாவட்டங்கள் விரைந்து முடித்து தலைமைக் கழகத்துக்குப் பட்டியலை அனுப்பி வையுங்கள். அடுத்ததாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலையும் உடனடியாக அனுப்பி வையுங்கள். இந்த இரண்டும் உடனடிப் பணிகளாக முடித்துவிட வேண்டும் என்று கழக நிர்வாகிகளை, குறிப்பாக மாவட்டச் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பணிகளை முடித்ததும் நாம் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியாக வேண்டும்.

“கொரோனா.... கொரோனா” என்று மார்ச் மாதம் முதல், ஐந்து மாதம் ஓடிவிட்டது.

இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன. இந்த ஐந்து மாதத்துக்கும் சேர்த்து நாம் தேர்தல் வேலைகளைப் பார்க்க வேண்டும்.

நான் தொடர்ந்து சொல்லி வருவதுதான்...

தேர்தல் எப்போது நடந்தாலும், நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். ஆனால் நாம் அந்த வெற்றியை எளிதில் பெற்றிட விடமாட்டார்கள். போராடித்தான் வெற்றியைப் பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

இன்றைய ஆளும்கட்சியின் அக்கிரமங்கள் - அநியாயங்கள் - கொள்ளைகள்- கமிஷன் – கரெப்ஷன் – கலக்‌ஷன் - ஆளும்கட்சியின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் - பாதியில் நின்று போன திட்டங்கள், கொரோனாவிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொடிய ஆட்சி இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - இவை குறித்த தகவல்களைத் திரட்டுங்கள். மக்களுக்கு நினைவூட்ட வேண்டியவை - இவைதான்.

கடந்த பத்தாண்டு காலத்தில், தமிழகம் எந்த வகைகளில் எல்லாம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை மக்கள் மன்றத்தில் நாம் வைத்தாக வேண்டும்.

அ.தி.மு.க. அரசு 2011-ம் ஆண்டு முதல், ஒரு துரும்பையும் தூக்கிப் போடவில்லை என்பது மக்களுக்குத் தெரியும். அதனை மக்களுக்கு நினைவூட்டும் பிரச்சாரத்தை நாம் செய்தாக வேண்டும்.

தி.மு.க. - எழுபது ஆண்டுகால பின்னணி கொண்ட பேரியக்கம்! இருபதாண்டு காலம், பேரறிஞர் அண்ணா அவர்களால் வார்ப்பிக்கப்பட்ட இயக்கம். ஐம்பது ஆண்டுகாலம் முத்தமிழறிஞர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம். நூற்றாண்டுகள் கடந்தும் கழகம் கோலோச்ச வேண்டுமானால், நான் ஒருவன் அல்ல- இந்த மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்ல- பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல- இயக்கத்தின் லட்சோப லட்சம் தொண்டர்களும் தலைவர்களாக மாறி உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால்தான் வெற்றி பெற முடியும்.

உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு இலக்குதான் இருக்க வேண்டும்.

அதுதான் மீண்டும் கழக ஆட்சி! மீண்டும் கலைஞர் ஆட்சி! மீண்டும் நம்முடைய ஆட்சி!

நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த பொதுக்குழுவில் பேசும் போது சொன்னேன்.

“இன்று முதல் நான் வேறொரு மு.க.ஸ்டாலின்” என்று சொன்னேன். அதேபோல அனைவரும், இன்று முதல் தங்களிடம் குறைகள் இருப்பின், அவைகளைக் களைந்து கழகம் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

இதுவரை எப்படிச் செயல்பட்டோம் என்பதை விட, இனி எப்படிச் செயல்படப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அடுத்த ஆறுமாதம் நம்முடைய செயல்பாடுகள் காரணமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது என்ற பெருமையை நீங்கள் பெற்றாக வேண்டும்.

இந்த மேடையில் நிற்கும்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுதான் என்னை வாட்டுகிறது.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் நம்மை விட்டு தலைவர் அவர்கள் மறைந்தார்கள்.

ஆகஸ்ட் மாதம் 28-ம் நாள் இதே இடத்தில் நிறுத்தப்பட்டு, அவர் வகித்த தலைமைப் பதவி எனது தோளில் சுமத்தப்பட்டது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில், அவர் பேர் சொல்லும் பிள்ளையாக - அவரால் வார்ப்பிக்கப்பட்ட நான் - அவரது ரத்தத்தால் ஆன நான் - அவரால் உருவாக்கப்பட்ட நான் - உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு - பணியாற்றி வருகிறேன்.

இந்த இரண்டாண்டு காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, கழகம் அடைந்துள்ள வெற்றி, பெற்றிருக்கும் மரியாதைகள் எனக்கே மலைப்பைத் தருவதாக அமைந்துள்ளன.

தலைவர் அவர்கள்தான் சொன்னார்கள்.

2015-ம் ஆண்டு சனவரி மாதம் 9-ம் நாள்.

கழகத்தின் 11-வது பொதுக்குழுவில் கலைஞர் அவர்கள் தலைவராகவும் பேராசிரியர் அவர்கள் பொதுச்செயலாளராகவும் நான் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பேசும் போது கலைஞர் அவர்கள் சொன்னார்கள்...

“கழகத்தின் காவலர்களிலே ஒருவராக இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய பக்குவத்தைப் பெற்றுள்ள தம்பி மு.க.ஸ்டாலின்” - என்று தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உச்சரித்த அந்தக் குரலை நான் இந்த அரங்கத்தில் கேட்கிறேன்.

“ஸ்டாலினுடைய உழைப்பின் தன்மையை, அந்த உழைப்பின் மேன்மையை, அந்த உழைப்பின் வலிமையைப் பாராட்டுகிறேன்” என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். அது என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. “ஸ்டாலினுடைய உழைப்பின் தன்மையை – உழைப்பின் மேன்மையை – உழைப்பின் வலிமையை பாராட்டுகிறேன்” என்று சொன்னார். அதுதான் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

நாம் முழுமையாக உழைக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அதுதான் சட்டமன்றத் தேர்தல்!

இன்றைக்கு நாட்டை ஆளும் அரசு எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. அனைத்திலும் லஞ்சம், ஊழல். தமிழ்நாட்டின் கடன் 4.45 இலட்சம் கோடி ரூபாய். இதைத்தான் சாதனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! இந்த வேதனை மிகுந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பணியை உடனே தொடங்கியாக வேண்டும்.

கொடிய கொரோனா காலத்திலும், மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் - பணியாற்ற வேண்டும் – நாமும் பக்க பலமாய் இருந்திட வேண்டும் என “ஒன்றிணைவோம் வா” திட்டத்தைத் தொடங்கினோம். இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்திலேயே எந்தவொரு கட்சியாலும் இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றிட முடியாது. அதைச் செய்தோம்.

அந்தப் பணியைச் செய்த மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகளிடம் காணொலி வாயிலாகப் பேசுகிற போது சொன்னேன், எத்தனையோ பேரிடர்களை நாம் சந்தித்திருக்கிறோம். மழை – வெள்ளம் – புயல் – சுனாமி ஆகியவை வந்திருக்கிறது; நாம் சென்று உதவியிருக்கிறோம். அப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை; பயமும் இல்லை. ஆனால், இந்த கொரோனா நோய் வந்தப் பிறகு – இப்போது போய் செய்த உதவி இருக்கிறது பாருங்கள்!; அதனால் தானே நம்முடைய மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனை இழந்தோம்; பலராமனை இழந்தோம்; பலபேரை இழந்திருக்கிறோம். அப்படி உயிரையே பலி வாங்கும் நோய் இது! தங்களது உயிரையே பணயம் வைத்து இந்தப் பணியில் ஈடுபட்டவர்களை வாழ்த்துகளை – பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் மட்டும் இன்று இருந்திருந்தால் உங்கள் கைகளையெல்லாம் பிடித்து முத்தம் கொடுத்து; கவிதை நடையிலே – கடிதத்திலே –கட்டுரையிலே எழுதி பாராட்டியிருப்பார்!

எதற்காக சொல்கிறேன் என்றால்; ‘ஒன்றிணைவோம் வா!’

இணைந்தோம் – பணியாற்றினோம் - வெற்றிப் பெற்றோம்!

அப்படி ஒன்றிணைந்து கழகப் பணி ஆற்றுவோம்! வெற்றி பெறுவோம்! வெற்றி நமதே!

விடைபெறுகிறேன். நன்றி! -இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

No comments

Powered by Blogger.