சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணி பாதிப்பு
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வெளி மாநிலப் போக்குவரத்து வசதி இல்லாததால் ‘ஆர்டர்கள்’ குறைந்துள்ளன. இதனால் சிவகாசியில் 2021-ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியின் முக்கியத் தொழில்களில், அச்சகத் தொழிலும் ஒன்று.ஆயிரத்துக்கும் மேற்பட்ட அச்சகங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இங்குள்ள அச்சகங்களில் ஆண்டு முழுவதும் வேலை நடந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக காலண்டர்தயாரிப்பில் நாட்டிலேயே சிவகாசிதரத்திலும், வடிவிலும், தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது.
சிவகாசியில் அச்சிடப்படும்காலண்டர்கள் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் புகழ் பெற்றவை. வழக்கமாக ஆகஸ்ட் முதல்வாரத்தில் (ஆடி 18-ம் பெருக்கு அன்று) தினசரி, மாதக் காலண்டர்களுக்கான மாதிரி ஆல்பங்கள் வெளியிடப்படும். வெளியூர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் காலண்டர்கள் ஆர்டர்கள் எடுத்துத் தரும் முகவர்கள், ஆல்பங்களைப் பெற்றுச் சென்று, ஆர்டர்கள் எடுத்து சிவகாசி அச்சகங்களுக்கு அனுப்புவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆல்பங்கள் வெளியிடப்படவில்லை. இது 50ஆண்டு கால காலண்டர் உற்பத்தியில் இதுவே முதல் முறை. கடந்த விநாயகர் சதுர்த்தியன்று சில நிறுவனங்களில் புது கணக்குத் தொடங்கி, காலண்டர் அச்சடிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
வழக்கமான அளவுகளில் தினசரி காலண்டர்களுக்கான ‘கேக்’ எனப்படும் நாட்காட்டி அச்சிடப்பட்டு வருகிறது. ஆனாலும், வெளி மாநிலங்களுக்குப் போக்குவரத்து வசதி முழுமையாக இல்லாததால் இந்த ஆண்டு ஆர்டர்கள் அவ்வளவாக வரவில்லை என்கிறார்கள் காலண்டர் உற்பத்தியாளர்கள்.
மேலும் வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளிபண்டிகையையொட்டி, ஏராளமானஆர்டர்கள் வரத் தொடங்கும். முக்கிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக காலண்டர்கள் வழங்குவார்கள். ஆனால், இந்த ஆண்டு பெரிய அளவிலான ஆர்டர்கள் எதுவும் இதுவரை வரவில்லை.
இது குறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் ஜெய்சங்கர் கூறும்போது,
‘‘முகவர்களிடம் இருந்து பெரிய அளவில் ஆர்டர்கள் வரவில்லை. வழக்கமான ஆர்டர்களுடன் ஒப்பிடும்போது இதுவரை 20 சதவீதஆர்டர்கள் மட்டுமே வந்துள்ளன. அந்த ஆர்டர்களும் இ-மெயில், வாட்ஸ்-அப் மூலமாகவே வந்துள்ளன. காலண்டரைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுதோறும் வடிவம் மற்றும் அளவுகளை மாற்றி காலண்டர்களை வெளியிடுவது வழக்கம்.
வண்ணங்கள், வடிவங்களை மட்டும் வாட்ஸ்-அப்பில் அனுப்பிஆர்டர் பெற முடியாது. காகிதத்தின்தரம், அட்டையின் கனம், உறுதித்தன்மை, அளவு ஆகியவற்றை நேரில் பார்த்தால் மட்டுமே அதன் தன்மையை அறிய முடியும் என்பதால் ஆர்டர் கொடுக்கும் நிறுவனங்கள், முகவர்கள் நேரில் வந்துதான் ஆர்டர்கள் கொடுப்பது வழக்கம். எனவே, வெளிமாநில பஸ்,ரயில் போக்குவரத்து முழுமையாகத் தொடங்கினால் மட்டுமே காலண்டர் தயாரிப்பு பணி விறு விறுப்படையும்’’ என்றார்.
No comments