Header Ads

யானைகள் அட்டகாசம் என்று எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகோள்!



✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

ஊடகங்கள் எப்போதும் யானைகள் அட்டகாசம் என்று எழுதுகிறார்கள்??

இது வன உயிரிக்கு மக்கள் மத்தியில் ஒரு எதிரான மனநிலையை உருவாக்கும் வார்த்தையாக இருக்கிறது.

உண்மையாக அட்டகாசம் செய்வது யார்??

யானைகளுக்கும் மனிதனுக்கும் எந்த பங்காளி சண்டையும் இல்லை. யானைக்குத்  தேவையானது ஒன்றே ஒன்றுதான், அது காடுகள் தான்.

அந்தக் காடுகளை மனிதன் ஆக்கிரமிப்பு செய்ததால்தான் யானைகள் மனிதர்களின் விளை நிலங்களுக்கு வருகின்றன. 

யானைகளுக்கு விளை நிலம்,பட்டா நிலம் என்பது எல்லாம் தெரியாது. 

அவைகளுக்குத் தேவையானது உணவு மட்டும்தான். 

அவைகளுக்குத் தேவையான உணவுகள் காடுகளில் இருந்தன.

தொடர்ந்து நடந்துவரும் காடழிப்பு, அவைகளுக்கு உணவு கிடைக்காமல் செய்துவிட்டன.

நமது விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைந்தால் யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று சொல்லும் நாம் யானைகளின் காட்டை மட்டும் அழித்தது எந்த விதத்தில் நியாயம்???

மனிதனுக்கு ஒரு நியாயம்... விலங்குகளுக்கு ஒரு நியாயமா???

யானைகளுக்கு தேவையானது உணவும் தண்ணீரும் வாழிடமும் தான்.

நமது நிலத்தில் யானைகள் நுழையும் பொழுது அட்டகாசம் என்கிறோம்.

அதேசமயம் யானைகளின் காடுகளில் மனிதன் நுழையும் பொழுது அதை நாம் வாழும் இடம் என்று சொல்கிறோமே இது எந்த விதத்தில் நியாயம்??

உண்மையில் அதை வாழிடம் என்று சொல்லக்கூடாது நாம் காடுகளை ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

மனிதனுக்கு ஒரு இடத்தில் வீடுகட்ட இடம் இல்லை என்றால் அவனால் வேறு இடத்தில் இடம் வாங்கிக்கொள்ள முடியும்.

ஆனால் யானைகளுக்கு அப்படியல்ல. அவைகளுக்கு இருப்பது ஒரே ஒரு வனம் மட்டும் தான்.

நமக்கு மட்டும்தான் அது காடு... யானைகளுக்கு அது வீடு... இந்த ஒரே ஒரு வாழிடத்தையும் நாம் ஆக்கிரமிப்பு செய்து விட்டால், அவைகள் எங்கு செல்லும்?? என்பதை யோசித்துப் பாருங்கள்!! 

ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் யானை அழிந்தால் அது யானையின் இறப்போடு நின்றுவிடாமல் காடுகள் அழியவும் வழிவகை செய்கிறது.

நமக்கு குடிக்கும் நீரைத் தருவது இந்த மேற்கு தொடர்ச்சிமலைகள் தான். இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை வளமாக்குவது யானைகள் தான்.

 யானைகள் செத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் வளம் குறையும். வளம் குறைந்தால் நமக்கு நீரும் குறையும்.

அப்போது நீர் இல்லாமல் மனிதன் இறக்கவும் நேரிடும்.

ஒரு யானை இறந்தால் யானை இறந்து விட்ட செய்தியை மட்டும் பார்க்காமல் அது இறந்தால் ஏற்படும் விளைவையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு யானை இறந்தால் அதை சார்ந்து வாழக்கூடிய பல உயிர்கள் பாதிக்கப்படும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

காரணம் இயற்கை என்பது ஒரு சங்கிலித்தொடர். 

ஒரு உயிரைச் சார்ந்துதான் இன்னொரு உயிர் வாழ்ந்தாக வேண்டும்.

இந்தச் சங்கிலியில் இருக்கும் ஒரு விலங்கு இறந்தால் அதைச் சார்ந்து வாழக்கூடிய அனைத்து உயிர்களும் அழியும் இது தான் இயற்கை தத்துவம். அதுமட்டுமில்லாமல் யானையை காட்டின் ஆதார உயிரினம்

(key stone species) என்று கூறுகிறார்கள்.

மரங்கள் உருவாக யானைகளே காரணம் அப்படி இருக்கும் பட்சத்தில் யானை இறந்தால் காடு அழியும். 

நாம் காடுகளை ஆக்கிரமித்து தேயிலைப் பயிர்களை பயிரிட்டோம்.

சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்ல ரிசார்ட்கள் கட்டினோம்.

யானை வழித்தடத்தில் ரயில் தண்டவாளங்களை அமைத்தோம். 

இது போன்ற பல வழிகளில் யானைகள் வாழும் காடுகளை அழித்து விட்டு வெட்கம் இன்றி நாம் நமது இடம் என்று  கூறிக்கொள்கிறோம்.

யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று கூறிக்கொள்கிறோம். 

நாம் உணர வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்... பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

இந்த பூமியில், நாம் வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ அந்த அளவுக்கு மற்ற உயிர்களும் வாழ உரிமை உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.  முக்கியமாக யானைகளுக்கு!!

அதனால், எழுதும்போது யானைகள் அட்டகாசம் என்று எழுதுவதைத் தவிர்க்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

-இயற்கை ஆர்வலர்கள் & யானையின் காதலர்கள் குழு

 

No comments

Powered by Blogger.