ருசியான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி....
✍️ | மகிழ்மதி.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 150 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
சீனி - 1/4 கப் + 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
பால் - 1/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
அரிசி ஊறியதும் தண்ணீரை நன்கு வடிகட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் அரைத்த மாவை கொட்டி மாவு சிவந்து விடாமல் மூன்று நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்தவும். வறுத்த மாவில் இந்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு இடியாப்பம் மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். மற்ற அனைத்து மாவையும் சிறிய முறுக்கு அச்சி உரலில் கொள்ளும் அளவிற்கு மாவை வைத்து இட்லி தட்டில் நூடுல்ஸ் போல் நீளமாக பிழிந்துக் கொள்ளவும். அதை இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்கவும்.
வேக வைத்த இடியாப்ப மாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். வெட்டிய துண்டுகள் தனித்தனியாக இருக்கும்படி உதிர்த்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து அரை கப் அளவிற்கு திக்கான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை அளவுள்ள மாவு உருண்டையில் கால் கப் பாலை ஊற்றி கரைத்து கொள்ளவும். அந்த மாவு கலவை அடுப்பில் வைத்து மூன்று நிமிடம் கரைத்து கொண்டே இருக்கவும். மாவு கஞ்சி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி அதனுடன் பொடி செய்த ஏலக்காய்த்தூள், சீனி, வேக வைத்து துண்டுகளாக்கிய இடியாப்பம் மற்றும் பாலுடன் கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு சேர்த்து கிளறி விடவும்.
குறிப்புகள்:
இந்த இடியாப்பம் பாலுடன் நன்றாக ஊறினால் சுவையாக இருக்கும்
No comments