Header Ads

கொரொனா பற்றிய மருத்துவரின் கேள்வி - பதில்கள்: நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வேளையில், நம் உடல் வெளிக்காட்டும் அறிகுறிகள் என்னென்ன...

 

(Dr. A. Ramalingam MD.,)

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

கொரொனா தொற்று நோய் கிருமிக்கான  சரியான மருந்துகள் (drugs) இன்னும் எந்த மருத்துவத்திலும் கிடைக்கப் பெறவில்லை. கொரொனா தொற்று நோய் பாதிக்காமல் இருக்க தடுப்பு மருந்துகள் (vaccines) ஆரம்பகட்ட ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்வது என்னவென்றால் கொரொனா தொற்று நோய் வராமல் தடுப்பது தான் இன்றைய சூழலில் புத்திசாலித்தனம். ஒரு வேளை இந்த நோய் தொ‌ற்று ஏற்படும் நிலை வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அதற்கு முன் கொரொனா நோய் பற்றிய புரிதலுக்காக சில தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். கொரொனா தொ‌ற்று நோய் ஒரு வித வைரசு கிருமியினால் ஏற்படுகிறது. பெரும்பாலான வைரசு கிருமிகளால் ஏற்படும் நோய்கள் நம் உடலின் எதிர்ப்பு சக்தியினால் தானாகவே கட்டுக்குள் வந்து விடும்(self limiting). கட்டுப்படும் கால‌ அவகாசம் ஒவ்வொரு வகை வைரசு நோய்க்கும் வேறு படும். சாதாரண சலதோசம்(common cold) ஒரு சில நாட்களிலும் சில மஞ்சள் காமாலை (Hepatitis) மாதக்கணக்கிலும் வருடக்கணக்கிலும் சரியாகும். சரி செய்ய முடியாத HIV போன்ற சில வைரசு நோய்களும் உண்டு. மேலும் பொதுவாக வைரசு கிருமிகள் உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்குதல் ஏற்படுத்தும். சில கிருமிகள் தீவிரமாக உடல் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்தும். கொரொனா தொற்று நோய் ஏற்படுத்தும் கிருமியானது நமது சுவாச மண்டலத்தை தாக்க வல்ல (respiratory viruses) வைரசு குடும்பத்தை சேர்ந்தது. அதிலும் அதி தீவிர மூச்சு திணறல் ஏற்படுத்தும் (Severe Acute Respiratory Syndrome - SARS) வகையை சார்ந்தது.

நோய் தொ‌ற்று ஏற்படும் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சளி, இருமல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். அதிக பட்சம் நான்கைந்து நாட்களில் முற்றிலுமாக சரியாகிவிடுகிறது. இது இலேசான பாதிப்பு தான்(Mild cases). அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே (asymptomatic) கூட இந்த தொ‌ற்று நோய் பரவுகிறது.  இந்த நோய் கிட்டத்தட்ட 80% நபர்களுக்கு இலேசான (mild) மற்றும் அறிகுறிகள் இல்லாமல் (asymptomatic) தான் தென்படுகிறது(முதல் பிரிவினர்- 

category 1). மீதம் 20% நபர்கள் நோயின் தன்மை தீவிரமாகி(moderate cases) மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு ஆளாகுகிறார்கள்(இரண்டாம் பிரிவினர் - 

category 2). இப்படி உள் நோய்களாக அனுமதிக்கப்பட்டவர்களில் 5% நபர்களுக்கு சுவாசம் செயலிழந்து(severe cases) செயற்கையாக இயந்திரம்(ventilator) மூலமாக சிகிச்சை அளிக்க நேரிடுகிறது (மூன்றாம் பிரிவினர் - 

category 3). இவர்களில் சிலருக்கு அதி தீவிரமாக மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும் போது (critical cases) சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர். இப்படியாக கொரொனா நோயினால் இறப்பவர்கள் விகிதம் 3 லிருந்து 5 வரை செல்கிறது. 

இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கொரொனா தொ‌ற்று நோய் பெரும்பாலும் சாதாரண சளி இருமல் காய்ச்சல் மாதிரியும் சில சமயங்களில் மூச்சு திணறல் ஏற்படும் தீவிர தன்மையாகவும் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஆக கொரொனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை மூன்று பிரிவினர்களாக வகை செய்யலாம்.

1) இலேசான பாதிப்பு அல்லது அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள்

2) மிதமான தாக்குதல் உடையவர்கள்

3) தீவிரமாக ஆபத்தான நிலையில் உள்ளவர்கள்

முதல் பிரிவினரை எப்படி அடையாளம் காண்பது? அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அறிகுறிகள் இல்லாமலே கொரொனா தொற்று நோய் இருக்கும் பட்சத்தில் நாம் பழகும்  உற்றார், உறவினர் நண்பர்கள், சக பணியாளர்கள், அறிந்தவர் அறியாதவர் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொரொனா தொற்று இருக்கலாம் என்ற உணர்வுடன் தான் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். அதற்காக தான் வீட்டிலும் வெளியிலும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் மற்றும் முகக் கவசம் அணிய வேண்டும்.

கீழ்வரும் அறிகுறிகள் கொரொனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாம்:

காய்ச்சல்

தொண்டை எரிச்சல் கரகரப்பு, 

சளி

இருமல்

சோர்வு

தலைவலி

உடம்பு வலி

வயிற்று வலி 

வாந்தி, குமட்டல் 

சுவை வாசனை இல்லாமை 

வயிற்று அழற்சி

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நம்மை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். முகக் கவசம் எந்நேரமும் அணிந்து கொள்ள வேண்டும். வெளியே வரவே கூடாது. கண்டிப்பாக  ஒய்வு எடுக்க வேண்டும். நீர்ச்சத்து ஊட்டச்சத்து ஆகாரங்களை எடுத்து கொள்ள வேண்டும். தினமும் நீராவி உள்ளிழுத்துக் கொள்ளலாம். மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேறென்ன கவனமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

கொரொனா தொற்று நோய் வயது வித்தியாசம் இல்லாமல் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை பாதிக்கிறது. இருந்தாலும்  சிலரையே தீவிரமாக தாக்குதல் நடத்துகிறது.  குறிப்பாக 60 வயது கடந்த முதியவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை இரத்த கொதிப்பு புற்றுநோய், நுரையீரல், இதயம், சிறுநீரகம், கல்லீரல் இதர நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், புகை, மது போன்ற கெட்ட பழக்கங்கள் உடையவர்கள் அனைவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி அதிக தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் (vulnerable population) தொடர் கண்காணிப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேலே சொன்ன நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அதற்கான மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.

 எப்படி தனிமை படுத்திக் கொள்ள வேண்டும்? 

 கொரொனா பரிசோதனை செய்து கொண்டவர் மருத்துவரின் ஆலோசனையிபடி அதற்கான கவனிப்பு மையங்களில்(Corona care centers) தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மருத்துவரின் பரிந்துரையில் அதற்கான வசதிகள் இருப்பின் வீட்டிலேயே தனிமைப் படுத்தி சிகிச்சை எடுக்கலாம்.

எப்போது மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவில் சிகிச்சை பெற வேண்டும்? 

தொ‌ற்று நோய் மிதமான மற்றும் தீவிர தாக்குதல் அடைந்தவர்களுக்கு அதற்கான மரு‌த்துவமனையில் (COVID Designated Hospitals) சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் மேலே சொல்லப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவை சேர்ந்தவர்கள்(category 2&3).

கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் கரொனா தொ‌ற்று நோய் மிதமான மற்றும் தீவிர தாக்குதல் உண்டாக்கி இருக்கிறது என்று உணரலாம்.

- முதல் பிரிவில் சொல்லப்பட்ட அறிகுறிகள் நான்கைந்து நாட்கள் கடந்து விட்டால் 

- மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, மயக்கம், அதீத சோர்வு, பசி ஆகாரம் இல்லாமை, தீராத வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்பட்டால் 

- ஆக்சிமீட்டர் சாதனத்தில் ஆக்சிஜன் 94% கீழ் காணப்பட்டால் 

- மருத்துவரின் ஆலோசனையின்படி எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் மாறுதல்கள் காணப்பட்டால். 

மருத்துவமனயில் உள் நோய் பிரிவில் சிகிச்சை எடுப்பதன் அவசியம் என்ன?
முன்பு சொன்னது போல வெகு சிலருக்கு மட்டுமே நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். அவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தால் நோயின் தன்மை தீவிரமாகாமல் தடுக்க முடியும். இறப்பு விகிதத்தையும் வெகுவாகக் குறைக்க முடியும்.

இந்த தகவல்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?

நாம் நோயை பற்றி தெரிந்து கொண்டால் தான் நாம் நம்மையும் காத்து கொள்ள முடியும் மேற்கொண்டு மற்றவர்களுக்கும் தொ‌ற்று பரவாமல் பார்த்து கொள்ள முடியும். பெரும் சேதத்தையும் தடுக்க முடியும்.

கொரனா தொ‌ற்று நோய் ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அவர் அடுத்த நான்கு வாரங்களுக்கு மற்றவர்களுக்கு தொ‌ற்று நோய் பரப்பி விடுவார். முதல் 14 நாட்கள் பரப்பும் தன்மை அதிகமாக இருக்கும் பிறகு குறைந்து விடும்.

முன்பு சொன்னது போல நூறு பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டால் பெரும்பாலான(80%) நோயாளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இவர்களை அடையாளம் கண்டு தனிமை படுத்தி விட்டால் மற்றவர்களுக்கு நோய் தொ‌ற்றும் அபாயம் குறைந்து விடும். 

அது போலவே மீதம் 15 லிருந்து 20 நபர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் அவர்களை சரியான நேரத்தில் கண்டு பிடித்து மருத்துவமனையில் அனுமதி செய்து சிகிச்சை அளிக்கப்பட்டால் இறப்பினை வெகுவாக குறைத்து விடலாம்

No comments

Powered by Blogger.