ரூ. 10 லட்சத்துக்கு டி.எஸ்.பி. வேலை... 'தில்லாலங்கடி ' பெண் காவல் ஆய்வாளரை நீதிமன்றம் சென்று சிக்க வைத்த கில்லாடி!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
ரூ. 10 லட்ச ரூபாய் கொடுத்தால், டி.எஸ்.பி வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற படியேறி வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ள சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷேக் முஸ்தபா. இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அருள்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஷேக் முஸ்தபாவிடத்தில் தான் இந்து அறநிலைய துறையில் உதவி மக்கள் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருவதாகவும், தன் மனைவி கவிதா திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் அருள்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் இருவருக்கும் அரசு துறை அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை செல்வாக்கு இருக்கிறது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் ஷேக் முஸ்தபாவுக்கு அருள்குமார் ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய ஷேக் முஸ்தப்பா தன் தம்பி ரியாஸ் குரூப்-1 படித்து வருவதாகவூம் அவருக்கு அரசு வேலை ஏதாவது வாங்கி தர வேண்டும் என்று அருள்குமாரிடம் கூறியுள்ளார். டி.எஸ்.பி வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என்று அருள்குமார் கூறியுள்ளார். முதல் கட்டமாக, என் நண்பர் ராஜாமணி என்பவர் கணக்கில் ரூ. 5 லட்சம் போடுங்கள் என்று அருள்குமார் கூறியுள்ளார்.
தொடர்ந்து, கடந்த 2018 - ஆம் ஆண்டு ஷேக் முஸ்தபாவும் அருள்குமார் கூறியபடி, ராஜாமணி வங்கிக்கணக்கில் கேஷ் முஸ்தபா பணம் செலுத்தியிருக்கிறார். 10 நாள்களுக்கு பிறகு, மீண்டும் அருள்குமாரை நேரில் சந்தித்து ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அருள்குமார், கவிதா ஆகியோர் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை . பணத்தை திருப்பியும் தரவில்லை.
இது குறித்து , மடிப்பாக்கம் காவல் நிலையம் முதல் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வரை ஷேக் முஸ்தபா புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இதைத் தொடர்ந்து , பெண் காவல் ஆய்வாளல் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் உதவியை ஷேக் முஸ்தபா நாடினார். நீதிமன்ற உத்தரயைடுத்து, மடிப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் கவிதா மீது விசாரணை முடுக்கி விடப்பட்டது.
விசாரணையில், இதற்கு முன் கும்பகோணத்தில் காவல் ஆய்வாளராக கவிதா பணியாற்றிய போது, ஜோதிடர் செந்தில்குமார் என்பவரின் உறவினர்களிடத்தில் ரூ. 9 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கும்பகோணம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செந்தில்குமார் புகார் செய்துள்ளார். அப்போது, செந்தில் குமாரிடத்தில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கவிதா உறுதி பத்திரம் எழுதி கொடுத்து . நடவடிக்கையிலிருந்து தப்பியுள்ளார். செந்தில் குமாருக்கு பணம் கொடுப்பதற்காக தற்போது ஷேக் முஸ்தபாவை ஏமாற்றிய கவிதா அவரை கொண்டு செந்தில் குமாரின் மனைவி ராஜாமணியின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வைத்தது விசாரணையில் தெரிய வந்தது.
தற்போது, காவல் ஆய்வாளர் கவிதா, அருள்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments