வர இருக்கும் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க அதிரடி மாற்றங்களை எடுத்து வருகிறது.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும் அண்மையில் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் பலருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கி திமுக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இன்றைய பட்டியலில் 15 பேருக்கு பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதில் ஏழு பேர் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள்.
குறிப்பாக அதிமுகவில் சிவகங்கை மாவட்டத்தில் தனக்கென பெரும் செல்வாக்கோடு திகழ்ந்து, அமைச்சராகவும் வலம் வந்த ராஜகண்ணப்பன் தற்போது திமுகவில் தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ்,தமாக, அமமுக என அடுத்தடுத்து இடம் மாறிய வேலூர் ஞானசேகரனுக்கு தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியைப் பெற்றுள்ளார்.
கடந்த முறை அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வேலூர் மாவட்டம் டாக்டர் விஜய்,புதுக்கோட்டை மாவட்டம் அமமுக மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் ஆகியோருக்கும் தற்போதுதிமுகவில் தற்போது தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி கிடைத்துள்ளது. பாஜகவில் மாநிலத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரச குமாருக்கு திமுக தலைமைக்கழக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்று மீண்டும் திமுகவுக்கு வந்த நாகை மாவட்டம் வேதரத்தினத்திற்கு விவசாய அணி இணைச்செயலாளர் பதவியும்,விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்,ராஜ்யசபா உறுப்பினர்,அமைப்புசெயலாளராகஇருந்த டாக்டர்.லட்சுமணனுக்கு திமுக மருத்துவர் அணி இணைச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட பலருக்கும் பதவி வழங்கப்பட்டதன் மூலம் தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது என்பதை காட்டுகிறது. ஆனால் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளராக இருந்து பின்னர் தேமுதிகவுக்கு சென்று மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஏஜி சம்பத்துக்கு தீர்மான குழு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.சம்பத்தின் தந்தை உழவர் கட்சியின் தலைவர் ஏ. கோவிந்தசாமி.திமுகவின் வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் கோவிந்தசாமி. உதயசூரியன் சின்னத்தை தன் கட்சிக்கு வைத்திருந்தார் அவர். பின்னாளில் அந்த சின்னத்தை கோவிந்தசாமியிடம் இருந்து திமுக பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இன்றைய பட்டியலில் டாக்டர்.லட்சுமணன், டாக்டர் விஜய், ராஜகண்ணப்பன், முத்துசாமி ஆகிய நான்குபேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.
No comments