Header Ads

கோதாவரி காவேரி இணைப்பு - திட்ட அறிக்கை!

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

கோதாவரி - காவேரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 200 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுள்ளது. கோதாவரி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில்  உள்ள த்ரயம்பகேஷ்வர் பகுதியில் உற்பத்தியாகிறது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் எல்லையில் கோதாவரியின் துணை நதியான  இந்திராவதியில் அணைக்கட்டப்படும். 

அதன் மூலம் தண்ணீரை  தெலங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணை, ஆந்திர மாநிலம் போலாவரம்,  நாகார்ஜீன்சாகர் அணைகள் வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டு வந்து,  பிறகு,  சோமசீலா அணை, பெண்ணையாறு வழியாக காவேரிக்கு கொண்டுவருவதுதான் கோதாவரி - காவேரி இணைப்பு திட்டமாகும்.

கோதாவரி ஆற்றிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 1100 டி.எம்.சி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதில் ஓரளவு கடலுக்கு சென்றதுபோக, மீதி நதி நீரை மக்கள்  பயன்படுத்தும்  வகையில் பாதுகாக்கலாம். கோதாவரி- காவேரி இணைப்பு திட்டத்தின்  மூலம் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், சிவகங்கை, ஏன் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் வரை எடுத்து சென்று பயன்படுத்தலாம் என்ற திட்டம் உள்ளது. 

இதுகுறித்து 1983ல் தேசிய நதிநீரை இணைக்க வேண்டும் என்ற என்னுடைய வழக்கில்  உச்ச நீதிமன்ற வழங்கிய உத்தரவில்  இந்த  திட்டமும் உள்ளடங்கியது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்துக்கு 83 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். 

இரண்டாம் கட்டம் பிரம்மபுத்திரா,  கங்கை,   மகாநதி இணைப்பு திட்டம்  முடிந்தபிறகு, தமிழகத்துக்கு 200 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் ஒடிசா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை, கேரளா என தென் மாநிலங்கள் பயன்பெறலாம். 

இது நீண்ட தொலைநோக்கு பார்வை கொண்டத் திட்டமாகும். ஏற்கனவே இதுகுறித்தான  ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்ட எனது வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. 

ஜல்சக்தி அமைச்சகமும் அந்த ஆய்வுக் குழுவோடு இணைந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறது. கங்கை - காவேரி இணைப்பு திட்டம் அறிக்கை தயாரித்தது ஒரு துவக்கம் மட்டுமே. மேலும் இதில் முன்னேற்றம் வேண்டும். நீர் வரத்து அதிகமில்லாத தமிழகத்துக்கு, கோதாவரி காவேரி இணைப்பு திட்டம் எதிர்காலத்தில்  பயன் கொடுக்கும். 

என்னை பொறுத்தவரையில் வீணாக கடலுக்கு செல்லும் முழுமையான நீரை நாம் பயன்படுத்த முடியாது.  கடலில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எவ்வளவு நீர் தேவையோ, அது கடலுக்கு செல்ல வேண்டும். எஞ்சிய நீரைதான் திருப்ப வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. இதில் கவனம்  வேண்டும். வெறுமனே நதிகளை இணைக்க வேண்டும் என்று மட்டுமே பேசுகிற நபர் நான் கிடையாது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.


No comments

Powered by Blogger.