கரெண்ட் இல்லையா.. சி.எம் செல்க்கு புகார் செய்யுங்கள்
✍ | -தினேஷ், காஞ்சிபுரம்.
கரெண்ட் இல்லையா.. சி.எம் செல்க்கு வேணும்னா புகார் செய்யுங்கள் என மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய பதிலால் வாலாஜாபாத் அடுத்த வில்லியம்பாக்கம் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் 281 மின் கம்பங்கள் , 9 மின் மாற்றிப் சேதம் அடைந்தன. மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது வரை மின்சாரம் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் கடந்த நான்கு தினங்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக மின் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் , இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் சாலை மறியலில் அப்பகுதி பொது மக்கள் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வாலாஜாபாத் காவல்துறையினர் மின்வாரிய ஊழியர் உடன் உடனடியாக பேசி துரித நடவடிக்கை எடுக்க கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
கனமழை மற்றும் காற்றின் காரணமாக கடந்த 4 நாட்களாக மின்சாரம் தடைபட்டது.தற்போது புயல் மற்றும் காற்று ஓய்ந்த நிலையில் மின்சாரம் இப்பகுதிக்கு அளிக்க மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டபோது பல அதிகாரிகளை தொடர்பு கொண்டபோதும் அவர்களும் அலட்சியமாகவே பதில் கூறியுள்ளனர். சிஎம் செல்லுக்கு கூட புகார் செய்யுங்கள் என அலட்சியமாக பதில் கூறுவதால் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
No comments