Header Ads

பஹ்ரைன் பிரதமர் மறைவு! -வைகோ இரங்கல்.


✍ | -ராஜாமதிராஜ்.

பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். அந்நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபாவின் சகோதரரான இவர், உலகில்  நீண்ட காலம், ஐம்பது ஆண்டுகளாகப் பிரதமர் பொறுப்பு வகித்து இருக்கின்றார். பல நாடுகள் அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்து இருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைனில் குதைபியா என்ற இடத்தில் தமிழர்கள் தங்கியிருந்த உறைவிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 16 தமிழர்கள் இறந்து போனார்கள். அந்தச் செய்தி கிடைத்த மறுகணமே அந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டார். கனிவான பிரதமர் என்று பஹ்ரைன் வாழ் தமிழர்கள் கொண்டாடும் ஒரு தலைவராக அவர் விளங்கினார்.

2016 ம் ஆண்டு ஒரிசாவில் டனா மஜ்ஹய் என்ற பழங்குடி விவசாயி, இறந்த தன்  மனைவியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு, 12 கிலோமீட்டர் நடந்து சென்று அடக்கம் செய்தார்  என்ற செய்தியைக் கேட்டு கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள்  துடிதுடித்துப் போனார்  பஹ்ரைனின் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு,  அந்தக் குடும்பத்திற்கும் அவரது பிள்ளைகளுக்கும் உதவித் தொகை வழங்கியதோடு, ஒரிசா மாநிலம் மேல்கர் பகுதிக்கு ஒரு மருத்துவ ஊர்தியையும் வழங்கினார்.

2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) அவரை சுகாதாரத் துறையில் உலகத் தலைவராக  அறிவித்தது . கத்தார் நாட்டின் கடல்  எல்லையை மீறியதற்காக பஹ்ரைன் வாழ் தமிழ் மீனவர்கள் சிக்கிச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

பஹ்ரைன் நாட்டை ஒரு பன்மைச் சமூக நாடாகக் கட்டி அமைத்தவர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் ஆவார். இந்து மக்கள் வழிபட ஆலயம் , கிருத்துவர்களுக்கு தேவாலயம் என எல்லா மத வழிபாட்டுத் தலங்களையும் உருவாக்கிக் கொடுத்த பெருமைக்கு உரியவர். தமிழர்களை பெரிதும் நேசித்தவர்   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,  நான் பஹ்ரைன் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொள்ளச் சென்று இருந்தபோது, அவரைப் பற்றித் தமிழர்கள் பெருமையாகப் பேசினார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வாதாரம் அளித்தவர் மறைந்தார் என்கிற செய்தி பஹ்ரைன் வாழ் தமிழர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.