தொழிலதிபரின் மனைவி நினைவு தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்பு நூலகம் திறப்பு
✍ | -ராஜாமதிராஜ்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தொழிலதிபர் காசிலிங்கம் என்பவரின் மனைவி செல்லகனி அம்மாள் - பாலாஜி நினைவு நாளை ஒட்டி மகளிருக்கான சிறப்பு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் சிறப்பு என்னவென்றால் மகளிர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நூலகத்தில் நீட் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு, பொறியியல் படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைத் தேர்வுகளுக்கான பாட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் மகளிரின் வளர்ச்சிக்கான சிறப்பு தொழில் வழிகாட்டி நூல்களும் இடம் பெற்றுள்ளது. இந்த நூலகத்தால் அப்பகுதி மாணவிகள் மட்டுமல்லாது முதியோர் மற்றும் தாய்மார்களும் வந்து நூல்களை படிக்க எளிதாக இருக்கும் என அப்பகுதி பெண்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
இதில் அரசு போட்டித் தேர்வு மட்டுமல்லாது வயது மூத்தவர் மற்றும் பெண்கள் விரும்பி படிக்கும் சிறுகதைகள், பெண் வளர்ச்சி, சமூக நீதி நூல்கள், சமையல் குறிப்புகள், திருக்குறள், உள்ளிட்ட சமூக நெறிகளை வளர்க்கும் பல நூல்களும் இடம்பெற்றுள்ளது.
சாத்தான்குளம் வட்டாரத்தில் முதல் முறையாக பெண்களுக்கென தனி நூலகம் தொடங்குவதால் இப்பகுதி பெண்களுக்கு படிப்பதற்கு வசதியாகவும், கூச்சமில்லாமல், கல்வியறிவை வளர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.
No comments