அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் செய்திருக்கும் ஊழல்கள் பார்ட்-2 விரைவில்!
"அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் செய்திருக்கும் ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் இப்போது அளிக்கப்பட்டுள்ள புகார் பார்ட்-1 தான்; விரைவில் பார்ட்-2-வும் ஆதாரங்களுடன் அளிக்கப்படும்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி !
இன்று (22.12.2020) மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து அ.தி.மு.க. அரசின் மீதான புகார் மனு அளித்த பின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
கழகத் தலைவர் அவர்கள் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
கடந்த 2011 முதல் 2016 வரை நடைபெற்ற அ.தி.மு.க.வின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் முறைகேடுகள் உங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்குத் தெரியும். அதைத்தொடர்ந்து, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் தலைமையிலான இந்த ஆட்சியில், நான்கு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடிப் போய் விட்டது.
எனவே, இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்களை அளித்திருக்கிறோம். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை நாங்கள் கொடுத்த புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல், மத்திய அரசு வழங்கிய அரிசியை வெளிச்சந்தையில் விற்றதில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவித்தது சம்பந்தமான ஊழல் ஆகியவை குறித்தும் ஆதாரங்களுடன் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு குறித்து ஏற்கனவே கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது ஊழல் புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கொடுத்திருந்தோம். அதன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அந்தப் புகார்கள் மீதான ஆதாரங்களை ஒன்று திரட்டி, இன்றைக்கு ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் - லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர் வருமானத்திற்கு மீறி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அதற்குரிய ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
2018-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ-வின் கீழ் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க ஆளுநர் அவர்கள் உத்தரவிட முடியும்.
அதனால் லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும். விசாரணை நடைபெறுவதை ஆளுநர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதற்குரிய ஆவணங்களையெல்லாம் இன்றைக்கு ஆளுநரிடத்தில் நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
இதுமட்டுமின்றி, இன்னும் பல அமைச்சர்கள் மீது ஊழல்கள் குறித்த தகவல்கள் எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. அவற்றை எங்கள் கழக வழக்கறிஞர்கள் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன், நிச்சயமாக மீண்டும், இப்போது பார்ட்-1 கொடுத்திருக்கிறோம்; பார்ட்-2 விரைவில் ஆதாரங்களுடன் கொண்டுவந்து ஆளுநரிடத்தில் கொடுக்கப் போகிறோம்.
செய்தியாளர்: 97 பக்க புகார் அளித்திருக்கிறீர்கள். ஆளுநர் என்ன பதில் அளித்திருக்கிறார்?
கழகத் தலைவர்: ஆளுநர் அவர்கள் படித்துப் பார்த்துவிட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை எடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. 2018-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்.
செய்தியாளர்: இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்படுமா?
கழகத் தலைவர்: இந்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் அளித்திருக்கிறோம். பல வழக்குகளும் போட்டிருக்கிறோம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. அதற்கு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் 'ஸ்டே' வாங்கி இருப்பது என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்தத் தடையை உடைப்பதற்கான நடவடிக்கைகளை எங்கள் சட்ட வல்லுநர்கள் செய்வார்கள்.
செய்தியாளர்: தி.மு.க.வின் கிராம சபை நாளைத் தொடங்குகிறது. இந்த ஊழல் புகார்களை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வீர்களா?
கழகத் தலைவர்: நிச்சயமாக மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வோம். இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பேட்டியளித்தார்.
No comments